2009-10-04

ரத்மலானையில் மீள் எழுச்சி பெறும் திருநந்தீஸ்வரம்

இந்து மா சமுத்திரத்தின் நித்திலம் என வர்ணிக்கும் வகையில் அமைந்தது இலங்கைத் தீவாகும். இற்றைக்கு ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர் 1505ம் ஆண்டு போர்த்துக்கேயர்கள் இத்தீவின் தென் பகுதியில் காலித்துறைமுகத்தில் காலடிவைத்தனர். தமது சமயம் விழிப்படைவதற்கு வேண்டி, இந்நாட்டில் பூர்வீகமாக வழிபாட்டில் இருந்த இந்து ஆலயங்களை அழித்துவிடச் சற்றும் தயங்கவில்லை. வடக்கில் நகுலேஸ்வரம், தெற்கில் திருநந்தீஸ்வரம், கிழக்கில் திருக்கோணேஸ்வரம், மேற்கில் முனீஸ்வரம் ஆகிய தொன்மை வாய்ந்த கரையோரத்தில் அமைந்திருந்த புனித இந்து ஸ்தலங்கள் யாவும் சிதைத்தழிக்கப்பட்டது. இதற்கான சான்றுகள் புதைபொருள் ஆய்வுகளில் இருந்து நிரூபிக்கப்பட்டிருக்கின்றது.



இதேபோலவே, ரத்மலானையில் கோயில் கொண்டு எழுந்தருளியிருந்த திரு நந்தீஸ்வரர் ஆலயமும் போர்த்துக்கேயரின் பார்வையிலிருந்து தப்பவில்லை. 1518 இல் சிதைத்து அழிக்கப்பட்ட திருநந்தீஸ்வரத்தின் பழம் பெரும் சிவலிங்கத்தின் பகுதியான ஆவுடையாரும் உடைந்த நிலையில் உள்ள நந்தியும் சிவலிங்கத்தின் உடைந்த மேல் பகுதியும் மற்றும் பல கோயிற் படிமங்களும் 1984 ஆம் ஆண்டு நிலத்தை அகழ்ந்த போது கிடைக்கப்பெற்றது. அகழ்வின் போது கிடைக்கப்பட்ட அம்மன் சிலை ஒன்று தற்போது தொல்பொருள் காட்சியகத்தில் உள்ளது.



நந்தீஸ்வரர் கோயில் அமைந்துள்ள ஊரின் பெயர் கொனாகோயில் என சிங்களத்தில் வழங்கப்படுகிறது. அதாவது நந்தியூர் என்று தமிழில் கூறலாம். இன்று இக்கோயிலானது பெளத்த மதத்தவரான காமினி பெர்னாந்து என்பவரால் பரிபாலிக்கப்பட்டு வருகிறது. சைவ, பெளத்த இரு சார்பினரும் சென்று தமக்கே உரிய முறையில் வழிபாடுகளை செய்து வருகிறார்கள். மகாசிவராத்திரி, நவராத்திரி, நாயன்மார் குருபூஜைகள், திருமுறை முற்றோதல் உட்பட சகல இந்து சமய சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றுவருவதுடன் அவற்றில் இந்து தமிழர்களுடன் சிங்கள பெளத்தர்களும் பக்திசிரத்தையுடன் இணைந்து கொள்வது சிறப்புக்குரிய அம்சமாகும்.


ரத்மலானயில் பலநூறு ஆண்டுகள் மிகவும் சிறப்புடன் விளங்கிய இந்துக்களின் பழம் பெரும் திருத்தலமான திருநந்தீஸ்வரம் போர்த்துக்கேயரால் சிதைக்கப்பட்டு இப்போது மீண்டும் சிவலிங்கம், நந்தி, பலிபீடம் என்பன அமையப்பெற்றுப் பொலிவு பெறுகின்றது. இவ்வாலயத்தில் இப்போது பிரதிஷ்டான வேலைகள் நடைபெற்று வருகிறது. சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு பின் மீள எழுச்சி பெறும் திருநந்தீஸ்வரம் இலங்கை நாட்டின் இந்துக்களின் பழம் பெரும் வரலாற்றின் சின்னமாகவும், புனித தலமாகவும், பண்டைய இருப்பின் பிரதிபலிப்பாகவும் விளங்குகிறது. திருநந்தீஸ்வரத்தின் பிரதிஷ்டான பணியிலும் வளர்ச்சியிலும் பங்களிப்பு செய்யவேண்டியது இந்துக்களாகிய எமது கடமையாகும். எம்மால் இயன்ற காணிக்கையினைக் கோயில் திருப்பணிக்காக ஒதுக்குவோமாக.

வாழ்க சைவம் வளர்க்க சைவநீதி



2009-09-30

நரசிங்கமுனைய நாயனார்


அறுபத்துமூவர் துதி
தத்து மூதெயில் மூன்றுந் தழல் எழ
முத்து மூரல் முகிழ்த்த நிராமய
சித்த மூர்த்திதன் தாளிணை சேர் அறு
பத்து மூவர் பாதமலர் போற்றுவாம்

சேக்கிழார் துதி
தில்லைவா ழந்தணரே முதலாகச் சீர்படைத்த
தொல்லையதாம் திருத்தொண்டர்த் தொகையடியார் பதம் போற்றி
ஒல்லையவர் புராணகதை உலகறிய விரித்துரைத்த
செல்வமலி குன்றத்தூர்ச் சேக்கிழாரடி போற்றி

நரசிங்க முனையர் குருபூஜைத் தினம் - புரட்டாதி மாத சதய நட்சத்திரம் -02/10/2009

நரசிங்கமுனையர் திருமுனைப்பாடி எனும் குறுநிலத்தின் மன்னராக விளங்கியவர். தமக்குரிய சேமிப்புச் செல்வமாக திருவெண்ணீற்றையே கொண்டவர். அவர் பகைவர் எவரும் இல்லாத தூய்மையுடைவர். திருக்கோயில்களைப் பேணிக் காப்பவராவார். அத்துடன் இவர் சிவ நெறித்தொண்டுகளை கவிலும் எண்ணுபவர். திருவாதிரை நட்சத்திரம் வரும் நாளில் எல்லாம் சிவனடியார்களுக்கு உபசாரம் செய்யும் இயல்புடையவர். அந்நாளில் சிவனடியார்களுக்கு நூறு பசும்பொன்னுக்கு குறையாது வாரி வளங்கி திருவமுது செய்வது அவரது உயர் வழிபாடு ஆகும்.

வழக்கம் போல ஒரு திருவாதிரை நன்னாளில் நடந்த சம்பவம் என்னவென்றால், அடியார் ஒருவர் காம வெறியின் தோற்றமாகவும் மேனியில் திருநீறு குறையாதவராயும் அவ்விடத்தில் தோன்றினார். அங்கிருந்த எல்லோரும் அவரை முகமெடுத்துக்கூடப் பாராமல் திரும்பினர். ஆனால் நரசிங்க முனையர் அவரை அணுகி அவர் வடிவத்தை உற்றுப் பார்க்கையில் சிவ சின்னமான திருநீறு மட்டுமே தென்பட்டது. திருநீறு அணிந்தவர் யாவராயினும் இகழ்ச்சிக்குரியவர் அல்லர் என்பதை அவர் நன்கு அறிந்தவராகையால் அந்த அடியாரை உபசரித்து மற்றவர்களுக்கு கொடுத்த உபசாரம் போல் இருமடங்காய் கொடுத்து அவரைத் தொழுது இனிய மொழி கூறி விடைகொடுத்து வழியனுப்பினார். இது நரசிங்க முனையரின் அற்புதமான ஓர் செயல் ஆகும்.

நரசிங்கமுனைய நாயனார் திருவடி நீழலைச் சென்றடையும் மார்க்கத்தை அடைவதற்காக சிவத்திருத்தொண்டுகளை நெறிதவறாது செயலாற்றி சிவசிந்தையுடைவராய் வாழ்ந்து, ஈற்றில் சிவனடியடைந்து மெய்வழி அன்பு கொண்டு மீளா நிலை பெற்றார்.

திருச்சிற்றம்பலம்


2009-09-07

சிறீ வள்ளி திருமணம் - பாகம் 10


இசையும் கதையும்


சிறீ வள்ளி திருமண ஒழுங்குகள்.

சிற்றூர் அடைந்து சிறுமி வள்ளி நாயகியை
முற்றும் உணர் வேந்தர் வடிவேற்கரசருக்கு
சுற்றம் முற்றும் சூழ்ந்து நின்று துதி செய்ய
சற்றும் தாமதியாமல் பணிந்து தாரை வார்த்தான் நம்பிராசன்

திருமணப்பாட்டு

கன்னி வள்ளி நாயகிக்கும் கந்தப்ப நாதனுக்கும்
மன்னும் உயர் சதுர் மறையின் வகுத்த விதி தவறாமல்
உன்னு திரு மணக் கிரியை ஓங்கு திருவருள் கொண்டு
முன்னுணரும் நாதரமா முனிராசன் செய்தாரே

திருவருட் குறிப்பாலே - நாரதர் தீவளர்த்து வேதவிதிக் கிரியை செய்தார்
அரியயன் சுரர் சூழ - சிவனார் ஆதி சக்தியோ விண்ணின்று மகிழ்ந்தார்
தேவர் பூ மழை சொரிந்தார் - ஞானச் சிங்கார வேலனுக்கு வாழ்த்துரைத்தார்
பாவலர் பாடி நின்றார் அடியார் பத்திரசத்தேனொழுகி ஆடி நின்றார்

திருமண வாழ்த்து

பல்லவி
வாழ்க வாழ்க வாழ்க வாழ்கவே மங்களமாய் வாழ்கவே
(வாழ்க)

அனுபல்லவி
வள்ளல் முருகன் வள்ளி தெய்வ யானையொடு வாழ்கவே
(வாழ்க)

சரணம்
ஏழ்க திருடன் ஒளியூமாகி இன்பமலரும் மணியுமாகி
சூழுமறைகளும் செயலுமாகி சுகமும் பொருளும் பயனுமாகி
அறமும் பொருளும் சுகமும் பெருக அரிய மறையின் நெறிகள் பெருக
அறிவு மிளிரும் கதிகள் பெருக அன்பு மணத்தின் பண்பு பெருக
(வாழ்க)


சிறீ வள்ளி திருமணம் முற்றிற்று

------ திருச்சிற்றம்பலம்
--------


சிறீ வள்ளி திருமணம் - பாகம் 09


இசையும் கதையும்

வள்ளி முருகனுடன் இணைந்தவுடன்
மிகவும் மெய் கலங்கி உணர்ச்சி வசப்படுதல்

வேதமே காணாத மெய்யடிகள் நொந்தனவோ
வேலாயுதா எனைத்தேடி வெகுவாய் நடந்தனையோ
தீமையேற் காயிரங்கும் சிவகுருவே ஆதி அந்தம் இல்லா அறுமுகனே
உமது தாளில் அடைக்கலமே

முருகன் பாங்கியை பார்த்து

சமர்த்தியமாய் சாதனை புரிந்து வள்ளியை கையடை செய்தாய்
சேமாமாக நீ வாழ்க! சித்தம் மிகு கருணை செய்வேன்

(பாங்கி அவ்விடத்தை விட்டு செல்லுதல்)

முருகனும் வள்ளியும் பூங்காவுக்கு செல்கிறார்கள்.
நம்பியின் மனைவி கொடிச்சி வள்ளியைக் காணவில்லையெனத் தேடுகிறாள்.

வள்ளியை காணவில்லை வள்ளியைக் காணவில்லை
நள்ளிரவு நேரத்தில் நானும் நன்கு தூங்கிவிட்டேன்
எங்கு தான் போயிருப்பாள் என்நெஞ்சு கலங்குகிறது
எல்லா இடமும் தேடியும் காணவில்லை வள்ளியை

நம்பி : என்ன வள்ளியைக் காணவில்லையா? இது என்ன வம்பு?

கொடிச்சி : ஓமப்பா.. வள்ளியை இங்கு காணவில்லை… ஐயையோ!!!

நம்பி : இது என்ன அநியாயம். என் செல்வம் வள்ளியம்மாவுக்கு ஏது நடந்தது? இனி நான் செய்வது என்னவோ?

வேடுவர்கள் கூடுகிறார்கள்

நம்பி மெய்நடுங்க கோபம் கொண்டு அழுது வெம்பி
தனது வேடுவர் கூட்டத்துடன் தேடுதல் மேற்கொண்டான்

போர் எழுச்சி

இலங்கிய வில்லிசை விளங்கிடவே
ஈட்டி வாள் பாலம் அம்பும் ஏனைய கருவிகளும் சேர ஒலி
எடுத்தனரே மிக விசையுடனே சென்றனர் வள்ளியைத்தேடி
வேட்டை நாய் வழி காட்ட சீர் மிகு திருப்பூங்கா ஒன்றில்
மாட்சிமை பொருந்திய வள்ளலுடன் இருப்ப வள்ளியைக் கண்டனரே

அவர்களைக் கண்ட வள்ளி முருகனுக்கு கூறுகிறாள்

வருகின்ற வேடுவர்கள் மிகக்கொடியவர்கள்
கொடூரம் மிகச்செய்வார்கள் என்கோவே
கருகின்றது என்நெஞ்சம் மிகவும் ஐயா
ஒருவாறு நாம் இவ்விடத்தை விட்டு அகலுவோமா?

முருகன் புன்னகையுடன் வள்ளிக்கு கூறுகிறார்

வேடுவர்கள் உன்னை இனித் தீண்ட மாட்டார்
அவர்கட்கு கேடு வருவதை முன் அறிய மாட்டார்
அவர்கள் பாடு நீ இப்போது நன்கறிவாய்

என்று கூறி கோடுயர் கோழிக் கொடி கொக்கரக்கோ என ஒலிக்க வைத்தார். அக்கணத்திலே அங்கு எதிர்த்து வந்த வேடுவர் கூட்டமெல்லாம் மடிந்தார்கள். தனது பெற்றார் சுற்றத்தார் எல்லோரும் இறந்த நேரத்தில் வள்ளி நாயகியை முருகன் சோதிக்க விரும்புகிறார் முருகவேள் பெருமான்.

நாம் இவ்விடத்தை விட்டு செல்வோம் எனக் கூறியதும், வள்ளி எவ்வித தயக்கமும் இன்றி கந்தனுடன் இணைந்து சென்றாள்.
- பதியோடு பாசம் சேர்ந்து விட்டது பசுவை நீக்கி விட்டு



நாரதர் வருகை

தந்தை தாய் தமர் அழிய இந்தத்
தையல் தனைக் கொண்டு செல்வது தகுமோ
எந்தையே அருள் புரிவீர்

எம்முருகன் சம்மதித்து புன்னகை செய்து
வள்ளியின் புகழை இந்த உலகம்
உணரும் தத்துவத்தைக் காட்ட நினைந்து

"வள்ளியே இவர்களை நீ உடனே உயிர் பெற வழங்குக வரம்" என இளங்குமரன் எடுத்துரைத்தார்.

வள்ளி, இறந்து கிடந்தவர்களை உயிர் பெறும்படி தன் மனதில் கூற யாவரும் உயிர் பெற்று எழுந்தார்கள்.

நம்பி முருகனை வணங்குதல்

நீல மயில் ஏறும் நிர்மல மூர்த்தியே
கோலக் குறத்தி தனை ஏற்கும் குணசீலா
மூல காரணத்தை அறியாது என் செய்த பிழையை
ஞாலத்தார் அறிய மன்னித்து அருளினையோ
செய்த பிழை பொறுத்தருளும் - தேவரீர்
சிற்றூர்க்கு வந்து மணம் செய்திடுவீர் - என்றும்
வேதம் புகழ் நாரதரும் வருவீராக…

பாகம் 09 முற்றிற்று...


2009-09-06

சிறீ வள்ளி திருமணம் - பாகம் 08


இசையும் கதையும்


முருகன் வள்ளியைத் தன்னுடன் இணைத்து விடும்படி பாங்கியை வேண்டல்

மாதே கேள் நின் தலைவி வள்ளி எனும் பெண்ணரசை
நாரணனர் தந்த ஞானச் சிறுமிதன்னை
காரணமாகிக் காட்டிற் பிறந்தவளை
சீரான கற்புடைய கனியில் வடித்தெடுத்த
தேனான வள்ளியை நான் வதுவை செய்வதற்கு வழி செய்யாயோ…

பாங்கி மறுப்பு

கள்ளமில்லா வடிவேலனை பார்த்து பாங்கி கூறுதல்

ஐயரே பெரியவரே இந்த செய்தி தனை கேட்டு நீர்
உய்யும் வழி செய்தால் வேடுவரோ பொல்லாதவர் காணும்
உம்மையும் கொன்றிடுவார் என்னையும் துன்புறுத்துவார்
செய்யும் வகை அறியேன் ஓடி மறைந்து விடும்

முருகன் பதில்

வள்ளி தனை நான் மணக்க வழியில்லா விட்டாலோ
மடலேறு வேனென்று வடிவேலன் கட்டுரைத்தார்
(அவமானமாகிய எச்சரிக்கை முருகன் கூற)

பாங்கி

ஐயா கலங்காதீர் அறுக்க மடல் ஏறாதீர்
அம்மை தனை நான் கொணர்ந்து தருவேன் அம்மட்டும் நீர்
மையாகும் நன்னிழல் மாதவிப் பொதும் பரில்
மறைந்திருப்பீர் எம்பெருமானே! என அகன்றாள்

வள்ளியை முருகனிடம் ஒப்படைத்தல்

பாங்கி


வள்ளி நாயகியே நீ பதியை அடைவதற்கு பல்லாண்டு காத்திருந்தாய்
வள்ளல் நாயகன் பால் நான் ஒப்படைப்பேன்
கள்ளமில்லாக் கற்பரசே கவலையில்லாமல் என்னுடன் வா

என்று பாங்கி கூட்டி செல்ல

வள்ளி

என் அருமைத்தோழி நான் உன்னை மறவேன்
நீ என்னை அவருடன் சேரச் செய்த பணியை
(பாங்கி இருவரையம் விட்டு அகன்றாள்)

உரை

இருவரும் கலந்து இணையிலாத இன்ப நிலையை அடைந்தனர். பின்பு முருகன் வள்ளியை விடைபெற்று அகன்றார். புனத்தை அடைந்த வள்ளியை தினை அறுவடை காரணமாக வேடுவர் சேரிக்கு அழைத்து செல்கிறார்கள். சிற்றூர் அடைந்த வள்ளி தன்னுயிரை நாடி வந்த நாயகரை
என்றைக்கு காண்பேனோ என என்புருக கரைந்து கண்கள் கலங்கி புலம்பி சோர்ந்து வீழ்ந்தாள்...

நம்பி வருந்திப் பரிகாரம் செய்தல்

எனது மகள் வள்ளி நாயகியே உனது நிலை மாறவேண்டியதேன்?
உனக்கு நேர்ந்ததுவோ என்ன என்று வெறியாட்டச்சாமியை அழைத்து வந்து பரிகாரம் செய்வித்தான். தமது குலதெய்வமாகிய கந்தப்பெருமானுக்கு வேண்டிய விழா எடுத்தார்கள். வெறியாட்டக் கூத்தும் வேலனுக்கு விழா எடுத்தும் யாதும் பயன் இல்லை. கணமேனும் கண்ணுறுக்கம் கற்பரசி கொள்ளவில்லை. என் நாயகனைப் பிரிந்து நான் உறங்கேன் என வள்ளி விழித்திருக்கையில்...

முருகன் தினைப்புனத்துக்கு வருகை

அங்கே வள்ளியை காணாது மிககவும் சலிப்படைந்தார்

தினைப்புனத்தில் உள்ள பட்சிகாள் விலங்குகாள்
என்மனத்தை பறிகொடுத்த வள்ளி தனைக் கண்டீரோ
என்குறை தீர யார் தான் உதவுவீரோ

முருகன் வள்ளி இருக்கும் இடத்தை தேடி அறிந்து, குடிசைப்பக்கமாக வந்து சேர்ந்தார்.
தனக்கு இசைவான இகுளையாகிய பாங்கியிடம் தான் வந்ததை அறிவித்தார்.

பாங்கி வள்ளியிடம் செல்லுதல்

வள்ளியம்மா வள்ளியம்மா உன்னை அழைத்துச்செல்ல
வெள்ளிமலை நாதர் அருளியவர் உனைத்தேடி வந்துள்ளார்
நள்ளிருளில் இப்போ நான் உன்னை அவரிடம் ஒப்படைப்பேன்
எள்ளளவும் சுணங்காமல் என்னுடன் நீ
எடுத்த அடியோசை கேட்காமல் வந்து விடு

எல்லோரும் நித்திரையில் இருந்த நேரத்தில் தோழியுடன் வள்ளி செல்லுதல்

சாந்த நடை நடந்து தாய் தந்தை தமரயலார்
தழுவு நாய் கண்ணுறங்க தருணமதைப் பார்த்திருந்து
இருண்ட நடு நிசியில் மெதுவாக அடி எடுத்து
வாய்ந்த கதவு திறந்து வழி பார்த்து நின்ற வள்ளலிடம்
வள்ளியை ஒப்படைத்தாள்…

பாகம் 08 முற்றிற்று...


2009-09-05

சிறீ வள்ளி திருமணம் - பாகம் 07


இசையும் கதையும்


முருகன் வள்ளிக்கு காட்சி கொடுக்கிறார்

ஓராறு வதனமும் ஈராறு கரமும்
ஓங்கார மயிலுடன் உற்றகழல் அடியும்
சீராய் விளங்கவே சிவகுமரன் நின்றான்
சீமாட்டி வள்ளியும் தெளிவாகக் கண்டாள்

முருகன் தோன்றியதும் வள்ளி பாடுகிறாள்

கைவேலின் அழகுடனே கைகுலிசமுதலாம் படைக்கலங்கள்
மை அணி கண்டன் தந்த கந்தன் பொருந்து கரங்கள் ஈராறும்
பொலிந்த முகங்கள் ஓராறும் இசைந்து தெரிந்த புரி நூலும்
மகிழ்ந்து சுரந்த இருதாளும் மகிழ்ந்து விளங்கு மயிலேறும்
திருந்தி அசைந்த கொடியாவும் சிறந்து விளங்கும் பெருமாளே


வேண்டுவார்க்கு வேண்டும் வரம் நல்கும் வள்ளலே வடிவேலா
மீண்டும் நான் பிறவிக் கடல் அழுந்தாமை புரிவாயே - என்னை
ஆண்டு கொள்ள வந்த அரசே அடியேன் அறியாமையால்
கொண்ட எனது பிழை பொறுத்தருள்வீர்...


முருகன்

பெண்ணே நீ என்னை அடைவதற்கு செய்த
கைவண்ணத்தாலே என்கருத்தில் உனைக்கொண்டேன்
சீவனைத் தேடிச் சிவம் வந்தணைக்கும் செய்கையீது
கன்னியே நீ சென்று தினைப்புலத்தைக் காவல் செய்வாயாக
மீண்டும் அங்கு நான் வருவேன்

வள்ளி தினைப்புலம் செல்ல முருகனும் அகன்றார்


எந்தை கந்தப்பன் எனை வந்து ஆட்கொள்வார்
அந்தோ இனி எனக்கு ஓர் குறையும் இல்லையென்று வள்ளி
புத்தி தடுமாறி விட்டேன் எனினும் இப்போ நான் அறிந்தேன்
தந்தி முகற்கிளையவர் தனது மெய்யுருவம் காண்பித்தார்

மிக ஆனந்தமாய் வள்ளி தினைப்புலத்தை அடைய அங்கு நின்ற தோழியாகிய இகுளை

பாங்கி

அம்மா நீ எங்குற்றாய்
ஆரணியம் தனில் நடந்து
எம்மாலே ஆனமட்டும்
எங்கணுமே தேடி வந்தேன்
(அம்மா)

பாய்புலிவாய்ப் பட்டனையோ
படு பேயைக் கிட்டினையோ
நோய் கொண்டு வழிமாறி
நொந்து மிக அலைந்தனையோ
(அம்மா)

வாய்கொண்டு பறவைகளைச்
சேர் என்று துரத்தாமல்
மாயமென மறைந்தாயே
மணமகள் போல நிற்கின்றாய்
(அம்மா)

கண்சிவந்து வாய் வெளுத்து
கனிவான வியர்வையுடன்
ஒண்ணகிலம் விம்மலுற
உடை நெகிழக் காரணம் சொல்
(அம்மா)


வள்ளி பதில்

பாங்கி நீ இவ்வாறு பதைபதைப்புக் கொள்ளாதே
ஓங்கும் மலைச்சாரலிலே சுனை ஒன்றில் நீராடி வந்தேன்
ஏங்கி நீ எரிச்சலுடன் ஏறுமாறாய் பேசாதே
தாங்கி எனைத் தேற்றும் தக்க பாங்கி நீ

இருவரும் இவ்வாறு நிற்க முருகன் வேடனாக வில்லுடன் வருகை


முருகன்

பெண்களே நான் எய்த அம்பு பட்டுக் காயமுடன் ஒரு பெண்யானை
திண்ணென ஓடி வந்து இப்புனத்தே வந்ததுவோ
ஒண்கண் மடவீர்காள் கூறுவீர்கள்
கண்கொண்டு வேடுவனார் கன்னியுடன் கலந்து கொண்டார்


பாங்கி (இகுளை உணர்ந்தாள்)

உங்கள் இருவீரதும் எண்ணக் கருத்தினை நான் உணர்ந்து கொண்டேன்
பாங்காக நீங்கள் பரிவாக பேசுங்கள் நான் அகலுகின்றேன்...

பாகம் 07 முற்றிற்று...

வெகுவிரைவில் பாகம் 08 பதிவிடப்படும்...

2009-09-04

சிறீ வள்ளி திருமணம் - பாகம் 06


இசையும் கதையும்

வள்ளி முருகனுக்கு தண்ணீர் வழங்கிய பின்,

முருகன் கூறுகிறார்

தண்ணீர்த் தாகத்தை தீர்த்தனை பெண்ணே!
நான் உன்மேல் கொண்ட மோகத்தைத்
தீர்க்க வழி செய்குவாய் பெண்ணே!

வள்ளி கிழவர் பால் சினம் கொள்கிறாள்..

கந்தரலங்காரம்

நத்துப் புரை முடியீர் நல்லுணர்வு சற்றுமிலீர்
எத்துக்கு மூத்தீர் இழிகுலத்தேன் தன்னை வெஃகிப்
பித்துகொண்டார் போல் பிதற்றுகிறீர் இவ்வேடர்
குலத்துக்கெல்லாம் ஓர் கொடும்பழியைச் செய்தீரே

வெறுப்பு கொண்ட வள்ளி

மாதவத்தோர் போலே வந்தீர்
இப்போ என்மீது மோகம் கொண்டீர்
பாதகம் செய்வதற்கு சற்றும் தயங்கீரோ

நரை திரை வந்துற்ற போதும்
சாதாரணமாக இவ்வார்த்தை கூறீனேரே கிழவரே
நில்லும் இவ்விடத்தே நான் புனம் காக்கப் போகின்றேன்

முருகன் ஏமாற்றல்

வள்ளிக்கு சமாதானம் கூறுவார் மன்னிக்கும் படி

நில்லு நில்லு என்று சொல்லிக் கிழவர் - உனது
நிலைமையறியாதிந்த நெறி மொழி புகன்றேன்
சொல்லுக்குக் கோபிக்கலாமோ- உனது
துணையின்றி நானிங்கே அடி வைக்கலாமோ
என் கைப்பிடித்து எனக்கு வழி காட்டு

என்று முருகன் சல்லாபமாக வள்ளிக்குச் சமாதானம் கூறித் தன் அண்ணனை (பிள்ளையார்) நினைத்தார். அண்ணாவுக்குச் சொல்லாமல் வந்த குற்றம் உணர்ந்தார்.

முருகன் அண்ணாவை அழைத்தல்


அண்ணா நீ வர வேண்டும் வர வேண்டும் - எனது
எண்ணம் நிறைவு பெற நீ வர வேண்டும்
விண்ணவரும் மண்ணவரும் போற்றும் கணநாதனே
பண்போடு யான் உன்னை நினையாது வந்த பிழை பொறுப்பாய்- எனது

நானென தென்கின்ற தன்மை யடங்க
திண்ணிய ஐம்புல வேட்கை யொடுங்க
ஞானம் மனாலயம் மேவி இருந்து
நற்பதம் தருவாய் கருணை புரிந்து அண்ணா

இவ்வாறு முருகன் விநாயகரை அழைக்க வருகின்றார்

யானை உருவில் விநாயகர் வருகை

பாட்டு

என்றங்கு கணபதியைக் கூவ - அந்த
இபராஜமா முகனும் கனிவுடனே வந்தார்
நின்றங்கு பிளிறு மொழி கேட்டாள் - வள்ளி
நெஞ்சுருகி அஞ்சினாள் ஆனையை கண்டு

வள்ளி

தஞ்சம் நீ எனக்கு தரவேண்டும் தவ வேட சுந்தரனே நான்
வெஞ்சினம் கொண்டு உன்மீது பழி சொன்னேன்
நெஞ்சம் பதை பதைக்குதையா என்மீது இரங்கி இந்த
யானை எனைத்தாக்குமுன்னே தஞ்சம் தருவாய் சரணம் சரணம்

(என்று கூறி சரவணனைக் கட்டித் தழுவினாள்)

முருகன் அண்ணாவுக்கு நன்றி கூறி போய் வருக என விடை கொடுத்தல்

தக்க சமயமதில் அண்ணா நீ வந்து சார்தலினால் எனது
இக்காரியம் இனிதே வினை முற்றியது அண்ணா
விக்கினங்கள் தீர்ப்பவனே போய் வருகவே

(விநாயகர் அகலவும்)

முருகன் வள்ளிக்கு உபதேசம்

குறிஞ்சிக் குமரி கேள் நீ முன்னம் என்னை அடைவதற்கு
குறித்த கருத்தின் படி இப்போது அக்கருமம் நிறைவாகிய – ஞான
அறிவு பெறும் உபதேசம் தையல் செவியில் புகட்டி
செறிவான எனதுருவம் கொண்டேன் காண்பாயாக!

பாகம் 06 முற்றிற்று..

முருகனின் திருப்பெருவடிவம் அடுத்த பதிவில் வர்ணிக்கப்படும்...

2009-09-03

சிறீ வள்ளி திருமணம் - பாகம் 05


இசையும் கதையும்

வேடுவர்கள் வருகை
:

வேடர்கள் மிக ஆரவாரமாக பல ஒலிகள் முழுங்க மிருக வேட்டையாடி விட்டு வரும்போது முருகன் கிழவன் உருவமாகிறார்.

பாட்டு:

பாட்டோடு வந்தடைந்த பல வேடர்..
கூட்டமதைப் பார்த்த சிலை வேல் வேடுவனார்..
பழுத்த நரைத் தாடியூடன் ஆட்டும் நடை நடந்தே..
அக்கை மணி வெண்ணீற்றின் அழகு...
விழங்க கிழ வடிவினராய் நின்றாரே...

முருகன் நம்பிக்கு நீறு கொடுத்தல்

ஓம்……..
நம்பி உனக்கு வெற்றி நலமே உண்டாகுக!

நம்பி மன்னர் (கிழவரைப் பார்த்து )
கோவே நீர் எங்கு வந்தீர் கூறுமின்கள்...

முருகன்

அப்பனே நம்பியே நான் அருட் குமரி தீர்த்தத்தே ஆட வந்தேன் (இது அருங் கருத்து)

நம்பி மன்னர்

ஆகா.. அப்படியே ஆகட்டும் நம் வள்ளிக்கும் துணையாகட்டும் இங்கிரும் ஐயரே!

(நம்பிராசன் அகன்றதும்)
முருக பஜனை வள்ளி தோழியர்களுடன் படிப்பதைக் கேட்டும் மகிழ்ந்துவள்ளியின் இனிய குரலும் அவள் தன் மீது வைத்திருந்த அன்பையூம் அறிந்ததும்

முருகன்

கிஞ்சுகமே நன்று நன்றென் மிஞ்சு பசி தீர்ப்பாயே…
சாதமிட்டுத் தீராத தனிப்பசியைத் தீர்ப்பாயே…
தாமதம் செய்யாதே தையலே…

வள்ளி அமுதூட்டல்

மாதவத்தோர் போற்றும் மறைக்கிழவரே…
இந்த வனவேடர் உண்பதுவும் வள்ளிக்கிழங்கும்…
பழமும் பயில் தேனும் தினை மாவும் என்பதனால்…
அதனைத் தருகின்றேன் இந்தாரும்!

அப்பெருமான் வள்ளியது கையாலே வாங்கியூண்டார்…
அப்பொழுது விழுங்கிட முடியாது விக்குமாய் போல நடித்து…
இப்பொழுது எனக்கு நீர்த்தாகம் மிகவும் உளது என்று…
சுந்தரியே புனல் தந்திட வழிகாட்டு என்றார்…

வள்ளி

தொண்டை விக்கிக்கொண்டதென்றால் என்செய்வேன்…
அண்டைப் புலவிற்கு அப்பால் உள்ள ஏழு மலைக்கு அருகில்…
தெண்ணீர்ச் சுனையுண்டு அங்கு சென்றால் உமது...
தண்ணீர் தாகம் எல்லாம் அடங்குமென செல்வீராக…

முருகன்

செல்லும் வழியறியேன் திருச்சுனையின் திசையறியேன்…
செல்வியே நீ வந்து நேரான வழி காட்டுவாயே…

வள்ளி

நல்ல வழி காட்டுகின்றேன் ஞானப்பெருங் கிழவரே…
நல்ல நீர் இருக்கும் சுனை அடைவதற்கு என் பின்னே…
மெல்ல மெல்ல நடந்து வாரும்…
(வள்ளியும் கிழவரை கையில் பிடித்துக் கொண்டு செல்கிறாள்)

பாட்டு

ஏறாத மேடெல்லாம் ஏறி அவர்கள் இருவருமாய்…
மாறான கருத்துடன் முருகன் வள்ளி பின் செல்ல…
ஏழுமலை ஏறி அதற்கப்பால் உள்ள அமிழ்தூறும்…
ஊறாது மலை உச்சியினில் இருந்து வரும் நீர் தன்னை அப்பன்…
ஊற்று ஞானம் கூடுமா போல் உவப்பாக உண்டார்…

பாகம் 05 முற்றிற்று...

வெகுவிரைவில் பாகம் 06 பதிவிடப்படும்...



2009-09-01

சிறீவள்ளி திருமணம் - பாகம் 04


இசையும் கதையும்

முருகன் வள்ளி முன் வேடுவனாக வருகிறார்

மானே இளங்குயிலே மயிலே மட்ப்பிடியே…
மைந்தொடியே நீ என்னைப் பார்த்து மணம் செய்வாய்…

வள்ளி

ஆர் காணும் வேடுவரே அடியேனைக் காதலித்தீர்…
அப்பாவூம் சோதரும் அறிந்தால் உமைத் தொலைப்பார்…
சீர்காரை என்னைத் திருமணமுஞ் செய்யத்…
திண்டாட்டம் கொள்ளாமல் சென்று விடும் என்றுரைத்தாள்…

முருகன் அதைக் கேட்டு

இன்னவாறு வள்ளி நீ எதிர் மாறு கூறாதே…
இன்ப மொழி யொன்று சொல்லு இன்முறுவல் செய்து விடு…
மன்னும் விழி நோக்கி வழியொன்று காட்டாயோ…
வன்வலைப்படு மான் போன்று எனை வருந்த வைக்காதே…

இவ்வாறு முருகன் ஆடல் செய்கிறார்.
அத்தருணம் வள்ளியின் தகப்பனார் நம்பிராசன் வருகின்றார்.


வள்ளி தம்பால் நாடி வரும் நம்பிராசன் நல்ல…
வள்ளிக்கிழங்கும் நறுங்காட்டுப் பசும்பாலும்…
தெள்ளிய நீரும் தேன் தினையும் நிரம்பச் சுமந்து…
கள்ளமிலாது கருத்துடனே அணைந்தான்…

உரை:

அவ்வேளையிலே அங்கு வந்து நின்ற குமரனாகிய வேடுவனார் செவ்விதான சீர் வேங்கை மரமாகி நல்லதோர் நிழலானார் குமரிக்கு

வேடர்கள்:

எவ்வாறு இவ்விடத்தில் இவ்வேங்கை மரம் வேரூன்றியதோ?
ஒவ்வாது இம்மரத்தை இல்லாது அகற்றுங்கள்...

வள்ளி:

அப்பா நான் இம்மாயமாம் வேங்கை வந்த வகையறியேன்…
அப்பாலாய் இப்பாலாய் தாயாகித் தந்தையாய்த் தானாகி நின்றதென்று…
தப்பாக கூறும் தன் மகளின் கூற்றுதனை மகிழ் நம்பிராசன் நம்பி…
இப்போதைக்கு இம்மரம் நிழலாக நிற்கட்டும் தறியாதீர் எனத்தடுத்தான்...

கந்தப்புராணம்

ஆங்கது காலை தன்னில் அடிமுதல் மறைகளாக
ஓங்கிய நடுவணெல்லாம் உயர் சிவ நீலதாக
பாங்கமர் சுவடு முற்றும் பல கலையாகத் தானோர்
வேங்கையின் உருவமாகி வேற்படை வேரன் நின்றான்

வேங்கை மரத்தைத் தறியாதீர்கள் எனத்தடுத்து தம் மகளுக்கு நிழலாகட்டும் எனக்கூறி அவ்விடத்தை விட்டு அகன்றான் நம்பிராசன்

வேங்கை மரம் வேடுவனாகின்றான். முன்பு போல மீண்டும் முருகன் வள்ளியிடம் கூறுகிறான்.

முகுந்தன் மகளே..
வள்ளி எனும் நாமம் பெற்ற உன்னை..
வெகுவாக விரும்பி மோகம் மிகவும் உற்றேன் நான்..
அம்மையே நீ என்னை அருமணம் செய்வாயாகுக…

வள்ளி முருகனுக்கு கூறுகிறாள் (முருகன் திருவிளையாடலை வள்ளி அறிதல்)

ஐயரே நீங்களோ உயர் குலத்தீர் தமியளோ வேடுவிச்சி…
தங்கள் குலம் விட்டு தாவி மணம் பூணுவது அருங் குலத்துக் காகாதே…
ஆகையால் அன்புடையீர் அடியேன் தனை விலகிப்போமின்…
இல்லையெனில் அல்லல் செய்யும் வேடுவரோ உம்மை...
தொல்லைகள் பலவும் செய்திடுவார் தொலைத்திடுவார்…

அன்புடையீர் எனக்கூறக்கேட்ட வேடுவனார் வள்ளியின் இணக்கத்தை நன்கு அறிந்தார். தான் வந்த விசயம்வெற்றி என தனக்குள் எண்ணி விட்டார். :)

பாகம் 04 முற்றிற்று...

வெகுவிரைவில் பாகம் 05 பதிவிடப்படும்...

2009-08-31

குரு பூசைத் தினங்கள்



சித்திரை மாதம்

1.திருநாவூக்கரசர் - சதயம்
2.இசைஞானியார்
3.சிறுத்தொண்டர் - பரணி
4.மங்கையற்கரசியார் - ரோகினி
5.விறன்மிண்டர் - திருவாதிரை
6.திருக்குறிப்புத்தொண்டர் - சுவாதி


வைகாசி மாதம்

7. திருஞானசம்பந்தர் - மூலம்
8. திருநீலநக்கர் - மூலம்
9. திருநீலகண்டயாழ்ப்பாணர் - மூலம்
10.முருகர் - மூலம்
11.சோமாசிமாறர் - ஆயிலியம்
12.நமிநந்தியடிகள் - பூசம்
13.கடற்சிங்கர் - பரணி


ஆனி மாதம்


14. அமர்நீதிநாயனார் - பூரம்
15. ஏயர்கோன்கலிக்காமர் - ரேவதி
மாணிக்கவாசகர் - மகம்


ஆடி மாதம்

16.சுந்தரமூர்த்திநாயனார் - சுவாதி
17.கழறிற்றறிவார் - சுவாதி
18.கலியர் - கேட்டை
19.கூற்றுவர் - திருவாதிரை
20.கோட்புலியார் - கேட்டை
21.புகழ்சோழர் - கார்த்திகை
22.பெருமிழலைக்குறும்பர் - சித்திரை
23.மூர்த்தியார் - கிருத்திகை


ஆவணி மாதம்


24.அதிபத்தர் - ஆயிலியம்
25.இழையான்குடிமாறர் - மகம்
26.குங்கிலியக்கலயர் - மூலம்
27.குலச்சிறையார் - அனுசம்
28.செருத்துணையார் - பூசம்
29.புகழ்துணையார் - ஆயிலியம்


புரட்டாதி மாதம்

30.உருத்திரபசுபதி - அச்சுவினி
31.ஏனாதிநாதர் - உத்தராடம்
32.திருநாளைப்போவார் - ரோகினி
33.நரசிங்கமுனையர் - சதயம்


ஐப்பசி மாதம்

34. இடங்கழியார் - கார்த்திகை
35. சத்தியார் - பூசம்
36. திருமூலர் - அச்சுவினி
37. நின்றசீர்நெடுமாறர் - பரணி
38. பூசலார் - அனுசம்
39. ஐயடிகள் - மூலம்


கார்த்திகை மாதம்

40. ஆனாயர் - அத்தம்
41. கணம்புல்லர் - கார்த்திகை
42. சிறப்புலிநாயனார் - பூராடம்
43. மூர்க்கர் - மூலம்
44. மெய்ப்பொருளார் - உத்திரம்


மார்கழி மாதம்

45. இயற்பகையார் - உத்திரம்
46. சடையனார் - திருவாதிரை
47. மாணக்கஞ்சாறர் - சுவாதி
48. வாயிலார் - ரேவதி
49. சாக்கியர் - பூராடம்


தை மாதம்

50. அப்பூதியடிகள் - சதயம்
51. அரிவாட்டநாயனார் - திருவாதிரை
52. கண்ணப்பநாயனார் - மிருகசீரிடம்
53. கலிக்கம்பர் - ரேவதி
54. சண்டேஸ்வரர் - உத்திரம்
55. திருநீலகண்டர் - விசாகம்


மாசி மாதம்

56. எறிபத்தர் - அத்தம்
57. காரியார் - பூராடம்
58. கோட்செங்கட்சோழர் - சதயம்


பங்குனி மாதம்

59.தண்டியடிகள் - சதயம்
60.நேசர் - ரோகினி
61.முனையடுவார் - பூசம்
62.கணநாதர் - திருவாதிரை
63.காரைக்காலம்மையார் - சுவாதி

சிறீ வள்ளி திருமணம் - பாகம் 03


இசையும் கதையும்

முருகன் திருத்தணிகைக்கு வருதல்


பாடல்:

வள்ளிக் கருள்புரிய வள்ளலெனும் வேலழகன்…
வாழ்கந்த மலையைவிட்டு மன்னும் திருத்தணிகைக்…
கொள்ளும் புகழ் மலையிற் கொலுவீற்றிருந்தானே…
குமரன் திருமுகப்பெருமான் இருந்தானே...

நாரதன் முருகனைப்பணிந்து ஆராதனை செய்கிறார் (முருகா சரணம்)

நினைத்த போதில் என்முன் வருவாய்…
நித்திய சாந்த நிலையைத் தருவாய்…
மனத்துயர் தீர்க்கும் மருந்தே வருவாய்…
மண்டலமெல்லாம் நிறைந்தாய் குருவாய்…

முருகன் நாரதரைப் பார்த்து

அருள் நிறைந்து வருகை தந்த அருமுனி தமைப்பார்த்து…
கருணை பொழிந்து வந்த காரணத்தை நயப்புடனே செவிமடுத்தார்!

நாரதர்:

பெருமறைகள் போற்றும் பெருமானே பூரணனே பூர்வா உனைப்…
போற்றிய சுந்தரவல்லி தாம்பெற்ற வரத்தின்படி நம்பிராசனுக்கு ஓர் மகளாகி… அழகுக்கிணையில்லா அழகியார் வள்ளி என நாமம் பெற்று வாழ்கின்றாள்…
குறவர் குலமுறையில் உயர் பரணில் ஆலோலம் ஓலமிட்டு வாடுகிறாள்…

கருணைக் கடலே கடுவினைகள் தீர்ப்பவனே கற்பகவல்லி…
தரு பாலகனே தணிகைமலை நாயகனே தந்திமுகற்கிளையவனே…
உரிமையுடன் நீ அங்கு சென்று அம்மணியாம் வள்ளி நாயகியை…
அரிய மணமியற்றி அடியேமைக் காத்திடுவீர் எம்வினை தீர்த்திடுவீர்…

முருகன் நாரதருக்கு

நன்று நன்று நாரதரே நமக்கும் நினைவதுவே…
என் கூற்று முறையாலே நான் ஆங்கு சென்று…
அன்னமென நீர் கூறும் அழகியாம் வள்ளிதனை…
மன்னும் மணம் செய்து காத்திடுவேன் செகமெல்லாம்…

(என்று கூறி முருகன் நாரதரை அனுப்பிவிட்டு, வேடனது வேடமாக வள்ளியிடம் செல்கின்றார்)

பாடல்

பல்லவி
சிலை வேடுவன் வந்தான் -அருட்
சிங்கார வேலன் வந்தான்…
(சிலை)

அனுபல்லவி
நிலை தாங்கிய தவம் பேணி…
நின்றிடும் வள்ளிமுன் சென்றிடும் சண்முக…
(சிலை)

சரணம்
மானைத் தேடு வானைப் போலே…
மதுவைத் தேடும் வானைப் போலே…
மோனம் நாடும் முதல்வன் போலே…
முன்னர் பழகிய நண்பனைப் போலே…
(சிலை)

2009-08-29

சிறீ வள்ளி திருமணம் - பாகம் 02

இசையும் கதையும்

குழந்தை வளர்ப்பு: (தாலாட்டு)

பாடல்:

ஆனந்தமாய்க் கொடிச்சி அன்பாக மார்போடு…
அணைத்திட்ட போதினிலே அருவிமுலை சுரக்க…
கானந்தனில் வள்ளிக் குழியின் கிடந்தனள்…
காரணமாம் பெயராக வள்ளி எனப்பெயரிட்டனர்…

குறவரின் மத்தியிலே கொஞ்சும் கிளி போலே…
குந்தித் தவழ்ந்து குதலை மொழி பேசி…
சிறுக நடைநடந்து சிற்றிடைச்சி வாழுகிறாள்…
தேவாதி தேவர் தொழுஞ் சீமாட்டி வாழுகிறாள்…

அந்த வனவேடர்க்கு அரிய ஒரு பெண்ணாகி…
அன்னை வள்ளி நாயகியார் அழகெறிக்க வாழுகிறாள்…
இந்த விதமாகி வளர்ந்திளமதிய மேனியளாய்…
ஈராறு வயதுடைய எழிற் கன்னியானாளே...

வள்ளி புனம் காத்தல்: (மலமாகிய பறவைகளை ஓடும்படி செய்தல்)

பாடல்:

கன்னி வள்ளி நாயகியை குலமுறை தவறாது…
மன்னு தினைப்புனத்திற் காவல் செயவைத்தார்கள்…
உன்னும் தவக் கொழுந்தாய் உத்தமியை வைத்தாரே…
உலகெல்லாம் நிற்பவனை உயர் பரணில் வைத்தாரே…

கூட்டிருளைப் போக்கக் குருவிவைத்த மாமணிபோல்…
குறவர் புனங் காக்கக் குமரியை வைத்தாரே…
தீட்டும் தவம் பேணும் ஜீவான்மா வாகியவள்…
சேருமலப் பறவைகளைச் சேராமல் ஓட்டுகிறாள்…

வள்ளி:

ஆலோலம் ஆலோலம் ஆலோலமே...
ஆலோலம் ஆலோலம் ஆலோலமே…
பறவைகள் புறவங்காள் ஆலோலமே...
பொலி தோகை மஞ்ஞைகாள் ஆலோலமே…
சேவல்காள் சொற்கிளிகாள் ஆலோலமே
சிட்டுகளே குயிலினமே ஆலோலமே…

கதை:

வள்ளி தினைப்புலத்தில் வந்த பறவைகளை வாரிக் கவண் வீசி வாதாடி ஓட்டுகிறாள்.
உள்ளங் கசிந்துருகி ஓம்முருகா என்று சொல்லி உத்தமியாள் தினைப்புலத்து மத்தியிலே வாழ்கையிலே…

நாரதர் தினைப்புலதிற்கு வருகை:

பாடல்:

திருத்தணிகை மாமலையில் சிவமுருகன் வீற்றிருக்க…
சிறீவள்ளி முந்தவத்தின் செய்த பயன் கூடியதால்…
பொருத்தமாய் நாரதரும் புனத்தினிலே வந்தடைந்தார்…

பொற்புயர்ந்து கற்புயர்ந்து புகழுயர்ந்து நின்றாளை…
கண்டு வணங்கிக் கருணையால் விடைபெற்றுக்…
கவினார் திருத்தணிகைக் கந்தனிடம் வந்தடைந்தார்…

தொண்டர்க்கரியவனே சுந்தரனே...
மெய்ஞ்ஞான பண்டிதனே…
என்று குகன் பாதம் பரவி நின்றார்...

பாகம் 02 முற்றிற்று...

வெகுவிரைவில் பாகம் 03 பதிவிடப்படும்...

2009-08-28

சிறீ வள்ளி திருமணம் - பாகம் 01

இசையும் கதையும்

இறைவணக்கம்
:

பாடல்
விக்ன விநாயகனே சரணம்..
எண்குணம் விளங்கும் பரமனே சரணம்..
இமயம் மேவிய இளவரசியே சரணம்..
நித்தம் அருள் செய்யும் நீலவண்ணனே சரணம்..
கருணை செய் சிவ கடம்பனே சரணம்..
தனம் தரும் செல்வியே சரணம்..
இயல் இசை நாடகம் இயல்பாகவே தரும் வாணியே சரணம்..


தேம்பாகு போன்றதோர் தெய்வீக மாக்கதையாம்..
சிறீ வள்ளி நாயகன் திருமணக் கதையாம்..
மேம்பாடுடைய மேன்மக்களே செந்தமிழ்ச்செல்வர்களே..
தாம் அருள்கொள் நோக்கினிற்கொண்டுவப்பீர்களே..

கதை:

வாசகப் பெருமக்கள் அனைவருக்கும் இதய பூர்வ வணக்கம்..
"சைவநெறி" பதிவு அரங்கத்தில் நிகழ்த்தப்போவது சிறீவள்ளி திருமணக்காவியம்..
இந்த அருங்கதையானது, உரையுடன் கூடிய இசைப் பாடல்களுடன் பதிவிடப்படுகிறது.

பாடல்
வள்ளிமலைச்சாரலிலே வனவேடர் வாழும் சிற்றூர்…
தெள்ளுபுகழ் யாவும் வழமுடனே உள்ள தொண்டை நாட்டின்…
உள்ளதோர் வள்ளிமலைப் பக்க ஊராம் மேற்பாடியேயாகும்…
கொள்ளும் வனவேடர்கட்கு வேந்தன் ஆவான் புகழ் நம்பிராசன்…

நலமுடனே வாழுகின்ற நம்பி மன்னனுக்கு பெண்மகவூப்பேறு…
இலததனால் அது வேண்டிப் பச்சை மயில் வாகனனைப்பாடி…
பலகாலம் திருவிழாப் பூசை கொண்டு தியானத்தவமிருந்தான்…
தமைவேண்டும் நம்பியின் வேண்டுதலை நம்பன் உணர்ந்து அருள்செய்தான்…

வள்ளி பிறப்பு:

பாடல்
அருந்தவத்தின் பெரும்பேறோ அறுமுகவன் திருவிளையாட்டோ…
விரும்பியதை நம்பிக்கு அளிப்பதற்கேற்ற காலமதோ…
திருமால் புதல்விகளுள் ஒருத்தி சுந்தரவல்லி என்பாள்…
மான்வயிற்றில் அவதரித்து பருவம் வந்தவேளையிலே…
ஈற்றுமான் வள்ளிக்கிடங்கில் குழந்தையை ஈன்று சென்றதுவே…

வள்ளிக்குழியினுள் வந்துதித்த ஞானக்குழந்தை தனைக்கண்டு..
கள்ளமிலாக் களிப்படைந்த நம்பி நாடி அவ்விடத்தே நயமாகச்சென்று…
அள்ளியெடுத்து அணைத்து முத்தமிட்டு ஆனந்த வசமாகி…
பிள்ளைப்பாசமுடைய தன் மனைவி கையில் கொடுத்தானே...

பாகம் 01 முற்றிற்று....

வெகு விரைவில் பாகம் 02 பதிவிடப்படும்..

திருமூல நாயனார்

"சிவ சிவ என்ன சிவ கதி தானே"

திருக்கைலாயத்தில சிவபெருமான் வீற்றிருக்கும் திருக்கோயிலுக்கு முதல் பெரும் காவலராக இருப்பவர் திருநந்தி தேவர்! அவர் இந்திரன் திருமால் பிரமன் ஆகியோருக்கு சிவநெறியினை அருளும் பணி செய்பவர். அகத்திய முனிவரிடம் நல் நட்புக் கொண்டவர். ஆகையால் அகத்தியரைக் காண்பதற்காக வட கைலையில் இருந்து புறப்பட்டு பொதிகை மலை பக்கமாக பயணத்தை மேற்கொண்டார். அவர் வரும் வழியில் திருக்கேதாரம் பசுபதி நேபாளம் மற்றும் அபிமுத்தம் (காசி) ஆகிய திருத்தலங்களை பணிந்து திருப்பருப்பதத்தை அடைந்தார். இறைவனது அருள் கூத்தின் பயனாக அங்கிருந்து காஞ்சி நகருக்குச் சென்று சில நாட்கள் தங்கியிருந்தார். அதன் பின்னர் திருவதிகைவீரட்டானம் பணிந்து மேலும் அருட்பெரும் கூத்தாடும் பொன்னம்பலனார் வீற்றிருக்கும் சிதம்பரத்தை சேர்ந்தார். அங்கு சில காலம் இருந்து காவிரியை அடைந்து அதன் தென்கரையில் ஏறினார்.

சிதம்பரம் ஆகிய தலங்களை விட்டுப்பிரிய முடியாத போதிலும் நண்பனைக்காணும் நோக்கமாக அத்தலத்தை விட்டுக்கிழம்பி சென்றுகொண்டிருக்கும் பாதையில் பசுக்கள் கூட்டமாக நின்று புலம்பும் குரல் கேட்டு அவ்விடத்தை அடைந்தார். அப்பசுக்களை மேய்க்கின்றவன் சாத்தனூரில் உள்ள இடையர்களின் குடியிலே பிறந்து தன் குலத்தொழிலைப் புரிபவன். பசுக்களை மேய்த்துவரும் மூலன் என்ற பெயருடையவன் ஆவான். அவ்வேளையில் அவனை ஒரு பாம்பு கடித்ததினால் இறந்து கிடப்பதைக்கண்டார். பசுக்கள் அவனைச்சுற்றி வளைந்து நின்று கதறுகின்றன என்பதை அறிந்து கொண்டார். அப்பசுக்கள் மீது கருணை கொண்டு அவற்றின் துயரத்தை தீர்ப்பதற்கு உறுதிகொண்டார். இறந்து கிடக்கும் மூலன் எழுந்தால் பசுக்களின் துயரம் தீரும் என்பதற்காக தனது உடலை ஒரு புறம்பாக மறைத்துவிட்டுத் தன் உயிரை இடையனின் உடலில் பாய்ச்சி பிராகாமியம் என்ற மந்திரத்தை உச்சாடனம் செய்து திருமூலராக எழுந்தார்.

தம்மைப்பாதுகாக்கும் எசமானாகிய மூலன் உயிர் பெற்று எழுந்ததைக்கண்டு பசுக்கள் எல்லாம் நாத்தழும்பேறத் திருமூலரை நக்கி மோந்து அவரைச்சுற்றி களிப்பினால் ஆரவாரம் செய்து மேய்ச்சல் பக்கங்களுக்குச் சென்றன. மாலை நேரம் வந்ததும் அப்பசுக்கள் எல்லாம் தமது கன்றுகளை நினைத்து சாத்தனூர் பக்கமாகத்திரும்பிச் சென்றன. சிவயோகியாரான திருமூலரும் இடையனின் உடம்பில் இருந்தபடியே பசுக்களின் பின்னே சென்று அவற்றின் தொழுவங்களைச் சேர்ந்தார்.

அவ்வேளையில் மூலனாகிய இடையனின் மனைவி தம் கணவர் உள்ளே வராது வெளியில் நிற்பதைக்கண்டு தனது கணவனை உள்ளே வரும்படி அழைத்தாள். ஆனாலும் அவர் உள்ளே செல்வதை மறுத்த போது அவள் அவரைத்தீண்டி வரும்படி வலியூறுத்த என்னைத்தீண்டாதே என்று உரத்துச்சொன்னார்.

தனக்கு யாரும் துணை இல்லாதவளாகிய மூலனின் மனைவி கவலையுடன் இருக்க யோகியார், புறம்பாகவே உள்ள ஒரு மடத்தில் போய் யோகத்தில் ஆழ்ந்தார். இரவானதும் மனம் மிகவும் வேதனையுடன் துயிலாமலே இருந்து மறுநாள் காலை விடிந்ததும் மூலனின் மனைவி அவ்வூரில் உள்ள பெரியார்களை அணுகி முறையிட்டாள். அவர்கள் திருமூலருடைய கோலத்தைப்பார்த்து இவர் உலக பற்றுகளை நீங்கியவர் என்பதை உணர்ந்தார்கள். ஆகையால் பெண்ணே! இனிமேல் இவர் உன்னோடு சேர்ந்து வாழ மாட்டார் என ஆறுதல் கூறி அவளை அவ்விடத்தை விட்டு அழைத்துச்சென்றார்கள்.


சாத்தனூர் பொதுமடத்தில் சிவயோகத்தில் அமர்ந்திருந்த திருமூலர் அந்நிலையில் இருந்து எழுந்து முன் தான் வந்த வழியே சென்று தனது உடல் இருக்கும் இடத்தை தேடிச்சென்றார். அவ்விடத்தில் சிவபெருமான் திருவருளின் நிமித்தம் உடல் மறைக்கப்பட்டு விட்டது. எனவே இவர் ஞான யோகத்தில் அமர்ந்து சிந்தித்தார். சிவாகமத்தின் உண்மைப்பொருளை தம் வாயிலாகத் தமிழில் வெளியிட வேண்டி தம்முடலை மறைத்தது இறைவன் திருவருள் என்பதை நன்கு உணர்ந்தார். மீண்டும் அவ்விடத்துக்கு இடையர்கள் வந்த போதும் தனக்கு நடந்த சம்பவங்களைக் கூறி அவர்களை அனுப்பி விட்டார். அவர்கள் போனபின் காமம், வெகுளி, மயக்கம் இவற்றைத் துறந்த திருமூலனார் திருவாவடுதுறை வந்தடைந்தார். அங்குள்ள திருக்கோயிலில் சிவனை வழிபட்ட பின் சுற்றுப்புறத்தில் உள்ள அரசமரத்தின் கீழே யோகாசனத்தில் அமர்ந்தார்.

சிவராஜ யோக நிஷ்டையில் இருந்து இதய கமலத்தில் எழுந்தருளிய இறைவருடன் இரண்டறக்கூடி ஒன்றித்துத் திகழ்ந்தார். உலகத்தார் பிறவித்துன்பம் என்னும் விஷத்தொடர்பில் இருந்து நீங்கி உய்யும் பொருட்டு சரியை, கிரியை, யோகம், ஞானம் முதலிய நான்கு நெறிகளையும் விரித்துக்காட்டும் "திருமந்திரம்" எனும் பாமாலையை ஆண்டுக்கு ஒரு திருமந்திரப்பாடலாக பாடத்தொடங்கினார். பரம்பொருளாகிய சிவபெருமானைப் போற்றி "ஒன்றவன் தானே" என்று தொடங்கி மூவாயிரம் ஆண்டுகள் சிவயோகத்தில் மகிழ்ச்சியுடன் ஆழ்ந்து மூவாயிரம் திருமந்திரப்பாடல்களைப் பாடி உலகுக்கு வழங்கியருளினார்.

அதன் பின்னர் சிவபெருமானது திருவருளினால் அவர் திருக்கயிலையை அடைந்து என்றும் பிரியாதபடி இறைவனது திருவடிநீழலில் சேர்ந்தார்.

2009-08-27

விநாயகர் வணக்கம்


"திருவாக்கும் செய்கருமம் கைகூட்டுஞ் செஞ்சொற்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர்தம் - கை"


விநாயகன் என்பதன் பொருள் வி- மேலான, நாயகன் - தலைவன். அதாவது தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாத் தலைவன். இதனை விநாயக பஞ்சரத்தின சுலோகத்தில் "அநாய ஏக நாயகன்" எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நம்பினோர் கெடுவதில்லை. இது நான்கு மறைத்தீர்ப்பு. நம்பிக்கையுடன் தும்பிக்கையைப் பற்றுதல் வேண்டும். நாம் எந்த விடயத்தை ஆரம்பிக்க வேண்டினும் விநாயக வழிபாடு செய்யாது ஆரம்பிப்போமானால் அவ்விடயம் தடைப்படும். விநாயக வழிபாடு எமது சைவ மக்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல. பெளத்த மக்களில் பெரும்பாலானோர் விநாயக வழிபாடு செய்வதில் மிக ஈடுபாடு கொண்டுள்ளார்கள்.

விநாயக வழிபாட்டின் மேன்மையைக் கூறப் பல அம்சங்கள் உள. அவற்றில் தெய்வீகமான விடயம் ஒன்றுண்டு. அதுவே முருகப் பெருமான் வள்ளியம்மை திருமணக்காவியம். விநாயகப்பெருமானின் சகோதரன் முருகன், தினைப்புலத்தில் வைகும் குறவர் குலக் கொழுந்தாகிய சிறீ வள்ளி நாயகியாரைத் திருமணம் செய்து கொள்வதற்காய் வள்ளி மலைச்சாரலுக்கு சென்றார். அவ்வம்மையைத் தான் அடைவதற்காக பல வேறு உபாயங்களைச் செய்தும் அவை எதுவும் பலனளிக்காது விட்டது. அப்போது தான் முருகப்பெருமான் தான் அண்ணாவின் ஆலோசனை இல்லாது வந்து விட்டதை நினைக்கிறார். அந்நேரம் தம்பியார் தன் உதவியை வேண்டுகிறான் என்பதை உணர்ந்து உடனே எம்பிரான் விநாயகர், வள்ளிப்புனத்துக்கு புறப்பட்டு வந்து கந்தனின் விருப்பத்தை நிறைவு செய்கிறார்.
இதனை அருணகிரிநாத சுவாமிகள் மிகச்சிறப்பாகப் புனைந்து தந்துள்ளார். அந்த புனித திருப்புகழ் வரிகள் இவையே..
"அத்துயரது கொடு சுப்பிரமணிபடு அப்புனமதனிடை இபமாகி
அக்குற மகளுடன் அச்சிறு முருகனை அக்கணமணமருள் பெருமாளே"

இபம் - யானை

இக்கருத்தினை எமது உள்ளத்துள் இருத்தி விநாயகப்பெருமானின் திருவருளைப் பெறுவோமாக.