திருக்கைலாயத்தில சிவபெருமான் வீற்றிருக்கும் திருக்கோயிலுக்கு முதல் பெரும் காவலராக இருப்பவர் திருநந்தி தேவர்! அவர் இந்திரன் திருமால் பிரமன் ஆகியோருக்கு சிவநெறியினை அருளும் பணி செய்பவர். அகத்திய முனிவரிடம் நல் நட்புக் கொண்டவர். ஆகையால் அகத்தியரைக் காண்பதற்காக வட கைலையில் இருந்து புறப்பட்டு பொதிகை மலை பக்கமாக பயணத்தை மேற்கொண்டார். அவர் வரும் வழியில் திருக்கேதாரம் பசுபதி நேபாளம் மற்றும் அபிமுத்தம் (காசி) ஆகிய திருத்தலங்களை பணிந்து திருப்பருப்பதத்தை அடைந்தார். இறைவனது அருள் கூத்தின் பயனாக அங்கிருந்து காஞ்சி நகருக்குச் சென்று சில நாட்கள் தங்கியிருந்தார். அதன் பின்னர் திருவதிகைவீரட்டானம் பணிந்து மேலும் அருட்பெரும் கூத்தாடும் பொன்னம்பலனார் வீற்றிருக்கும் சிதம்பரத்தை சேர்ந்தார். அங்கு சில காலம் இருந்து காவிரியை அடைந்து அதன் தென்கரையில் ஏறினார்.
சிதம்பரம் ஆகிய தலங்களை விட்டுப்பிரிய முடியாத போதிலும் நண்பனைக்காணும் நோக்கமாக அத்தலத்தை விட்டுக்கிழம்பி சென்றுகொண்டிருக்கும் பாதையில் பசுக்கள் கூட்டமாக நின்று புலம்பும் குரல் கேட்டு அவ்விடத்தை அடைந்தார். அப்பசுக்களை மேய்க்கின்றவன் சாத்தனூரில் உள்ள இடையர்களின் குடியிலே பிறந்து தன் குலத்தொழிலைப் புரிபவன். பசுக்களை மேய்த்துவரும் மூலன் என்ற பெயருடையவன் ஆவான். அவ்வேளையில் அவனை ஒரு பாம்பு கடித்ததினால் இறந்து கிடப்பதைக்கண்டார். பசுக்கள் அவனைச்சுற்றி வளைந்து நின்று கதறுகின்றன என்பதை அறிந்து கொண்டார். அப்பசுக்கள் மீது கருணை கொண்டு அவற்றின் துயரத்தை தீர்ப்பதற்கு உறுதிகொண்டார். இறந்து கிடக்கும் மூலன் எழுந்தால் பசுக்களின் துயரம் தீரும் என்பதற்காக தனது உடலை ஒரு புறம்பாக மறைத்துவிட்டுத் தன் உயிரை இடையனின் உடலில் பாய்ச்சி பிராகாமியம் என்ற மந்திரத்தை உச்சாடனம் செய்து திருமூலராக எழுந்தார்.
தம்மைப்பாதுகாக்கும் எசமானாகிய மூலன் உயிர் பெற்று எழுந்ததைக்கண்டு பசுக்கள் எல்லாம் நாத்தழும்பேறத் திருமூலரை நக்கி மோந்து அவரைச்சுற்றி களிப்பினால் ஆரவாரம் செய்து மேய்ச்சல் பக்கங்களுக்குச் சென்றன. மாலை நேரம் வந்ததும் அப்பசுக்கள் எல்லாம் தமது கன்றுகளை நினைத்து சாத்தனூர் பக்கமாகத்திரும்பிச் சென்றன. சிவயோகியாரான திருமூலரும் இடையனின் உடம்பில் இருந்தபடியே பசுக்களின் பின்னே சென்று அவற்றின் தொழுவங்களைச் சேர்ந்தார்.
அவ்வேளையில் மூலனாகிய இடையனின் மனைவி தம் கணவர் உள்ளே வராது வெளியில் நிற்பதைக்கண்டு தனது கணவனை உள்ளே வரும்படி அழைத்தாள். ஆனாலும் அவர் உள்ளே செல்வதை மறுத்த போது அவள் அவரைத்தீண்டி வரும்படி வலியூறுத்த என்னைத்தீண்டாதே என்று உரத்துச்சொன்னார்.
தனக்கு யாரும் துணை இல்லாதவளாகிய மூலனின் மனைவி கவலையுடன் இருக்க யோகியார், புறம்பாகவே உள்ள ஒரு மடத்தில் போய் யோகத்தில் ஆழ்ந்தார். இரவானதும் மனம் மிகவும் வேதனையுடன் துயிலாமலே இருந்து மறுநாள் காலை விடிந்ததும் மூலனின் மனைவி அவ்வூரில் உள்ள பெரியார்களை அணுகி முறையிட்டாள். அவர்கள் திருமூலருடைய கோலத்தைப்பார்த்து இவர் உலக பற்றுகளை நீங்கியவர் என்பதை உணர்ந்தார்கள். ஆகையால் பெண்ணே! இனிமேல் இவர் உன்னோடு சேர்ந்து வாழ மாட்டார் என ஆறுதல் கூறி அவளை அவ்விடத்தை விட்டு அழைத்துச்சென்றார்கள்.
சாத்தனூர் பொதுமடத்தில் சிவயோகத்தில் அமர்ந்திருந்த திருமூலர் அந்நிலையில் இருந்து எழுந்து முன் தான் வந்த வழியே சென்று தனது உடல் இருக்கும் இடத்தை தேடிச்சென்றார். அவ்விடத்தில் சிவபெருமான் திருவருளின் நிமித்தம் உடல் மறைக்கப்பட்டு விட்டது. எனவே இவர் ஞான யோகத்தில் அமர்ந்து சிந்தித்தார். சிவாகமத்தின் உண்மைப்பொருளை தம் வாயிலாகத் தமிழில் வெளியிட வேண்டி தம்முடலை மறைத்தது இறைவன் திருவருள் என்பதை நன்கு உணர்ந்தார். மீண்டும் அவ்விடத்துக்கு இடையர்கள் வந்த போதும் தனக்கு நடந்த சம்பவங்களைக் கூறி அவர்களை அனுப்பி விட்டார். அவர்கள் போனபின் காமம், வெகுளி, மயக்கம் இவற்றைத் துறந்த திருமூலனார் திருவாவடுதுறை வந்தடைந்தார். அங்குள்ள திருக்கோயிலில் சிவனை வழிபட்ட பின் சுற்றுப்புறத்தில் உள்ள அரசமரத்தின் கீழே யோகாசனத்தில் அமர்ந்தார்.
சிவராஜ யோக நிஷ்டையில் இருந்து இதய கமலத்தில் எழுந்தருளிய இறைவருடன் இரண்டறக்கூடி ஒன்றித்துத் திகழ்ந்தார். உலகத்தார் பிறவித்துன்பம் என்னும் விஷத்தொடர்பில் இருந்து நீங்கி உய்யும் பொருட்டு சரியை, கிரியை, யோகம், ஞானம் முதலிய நான்கு நெறிகளையும் விரித்துக்காட்டும் "திருமந்திரம்" எனும் பாமாலையை ஆண்டுக்கு ஒரு திருமந்திரப்பாடலாக பாடத்தொடங்கினார். பரம்பொருளாகிய சிவபெருமானைப் போற்றி "ஒன்றவன் தானே" என்று தொடங்கி மூவாயிரம் ஆண்டுகள் சிவயோகத்தில் மகிழ்ச்சியுடன் ஆழ்ந்து மூவாயிரம் திருமந்திரப்பாடல்களைப் பாடி உலகுக்கு வழங்கியருளினார்.
அதன் பின்னர் சிவபெருமானது திருவருளினால் அவர் திருக்கயிலையை அடைந்து என்றும் பிரியாதபடி இறைவனது திருவடிநீழலில் சேர்ந்தார்.
0 வாசகர் கருத்துக்கள்:
கருத்துரையிடுக