2009-08-29

சிறீ வள்ளி திருமணம் - பாகம் 02

இசையும் கதையும்

குழந்தை வளர்ப்பு: (தாலாட்டு)

பாடல்:

ஆனந்தமாய்க் கொடிச்சி அன்பாக மார்போடு…
அணைத்திட்ட போதினிலே அருவிமுலை சுரக்க…
கானந்தனில் வள்ளிக் குழியின் கிடந்தனள்…
காரணமாம் பெயராக வள்ளி எனப்பெயரிட்டனர்…

குறவரின் மத்தியிலே கொஞ்சும் கிளி போலே…
குந்தித் தவழ்ந்து குதலை மொழி பேசி…
சிறுக நடைநடந்து சிற்றிடைச்சி வாழுகிறாள்…
தேவாதி தேவர் தொழுஞ் சீமாட்டி வாழுகிறாள்…

அந்த வனவேடர்க்கு அரிய ஒரு பெண்ணாகி…
அன்னை வள்ளி நாயகியார் அழகெறிக்க வாழுகிறாள்…
இந்த விதமாகி வளர்ந்திளமதிய மேனியளாய்…
ஈராறு வயதுடைய எழிற் கன்னியானாளே...

வள்ளி புனம் காத்தல்: (மலமாகிய பறவைகளை ஓடும்படி செய்தல்)

பாடல்:

கன்னி வள்ளி நாயகியை குலமுறை தவறாது…
மன்னு தினைப்புனத்திற் காவல் செயவைத்தார்கள்…
உன்னும் தவக் கொழுந்தாய் உத்தமியை வைத்தாரே…
உலகெல்லாம் நிற்பவனை உயர் பரணில் வைத்தாரே…

கூட்டிருளைப் போக்கக் குருவிவைத்த மாமணிபோல்…
குறவர் புனங் காக்கக் குமரியை வைத்தாரே…
தீட்டும் தவம் பேணும் ஜீவான்மா வாகியவள்…
சேருமலப் பறவைகளைச் சேராமல் ஓட்டுகிறாள்…

வள்ளி:

ஆலோலம் ஆலோலம் ஆலோலமே...
ஆலோலம் ஆலோலம் ஆலோலமே…
பறவைகள் புறவங்காள் ஆலோலமே...
பொலி தோகை மஞ்ஞைகாள் ஆலோலமே…
சேவல்காள் சொற்கிளிகாள் ஆலோலமே
சிட்டுகளே குயிலினமே ஆலோலமே…

கதை:

வள்ளி தினைப்புலத்தில் வந்த பறவைகளை வாரிக் கவண் வீசி வாதாடி ஓட்டுகிறாள்.
உள்ளங் கசிந்துருகி ஓம்முருகா என்று சொல்லி உத்தமியாள் தினைப்புலத்து மத்தியிலே வாழ்கையிலே…

நாரதர் தினைப்புலதிற்கு வருகை:

பாடல்:

திருத்தணிகை மாமலையில் சிவமுருகன் வீற்றிருக்க…
சிறீவள்ளி முந்தவத்தின் செய்த பயன் கூடியதால்…
பொருத்தமாய் நாரதரும் புனத்தினிலே வந்தடைந்தார்…

பொற்புயர்ந்து கற்புயர்ந்து புகழுயர்ந்து நின்றாளை…
கண்டு வணங்கிக் கருணையால் விடைபெற்றுக்…
கவினார் திருத்தணிகைக் கந்தனிடம் வந்தடைந்தார்…

தொண்டர்க்கரியவனே சுந்தரனே...
மெய்ஞ்ஞான பண்டிதனே…
என்று குகன் பாதம் பரவி நின்றார்...

பாகம் 02 முற்றிற்று...

வெகுவிரைவில் பாகம் 03 பதிவிடப்படும்...

0 வாசகர் கருத்துக்கள்:

கருத்துரையிடுக