2009-09-07

சிறீ வள்ளி திருமணம் - பாகம் 09


இசையும் கதையும்

வள்ளி முருகனுடன் இணைந்தவுடன்
மிகவும் மெய் கலங்கி உணர்ச்சி வசப்படுதல்

வேதமே காணாத மெய்யடிகள் நொந்தனவோ
வேலாயுதா எனைத்தேடி வெகுவாய் நடந்தனையோ
தீமையேற் காயிரங்கும் சிவகுருவே ஆதி அந்தம் இல்லா அறுமுகனே
உமது தாளில் அடைக்கலமே

முருகன் பாங்கியை பார்த்து

சமர்த்தியமாய் சாதனை புரிந்து வள்ளியை கையடை செய்தாய்
சேமாமாக நீ வாழ்க! சித்தம் மிகு கருணை செய்வேன்

(பாங்கி அவ்விடத்தை விட்டு செல்லுதல்)

முருகனும் வள்ளியும் பூங்காவுக்கு செல்கிறார்கள்.
நம்பியின் மனைவி கொடிச்சி வள்ளியைக் காணவில்லையெனத் தேடுகிறாள்.

வள்ளியை காணவில்லை வள்ளியைக் காணவில்லை
நள்ளிரவு நேரத்தில் நானும் நன்கு தூங்கிவிட்டேன்
எங்கு தான் போயிருப்பாள் என்நெஞ்சு கலங்குகிறது
எல்லா இடமும் தேடியும் காணவில்லை வள்ளியை

நம்பி : என்ன வள்ளியைக் காணவில்லையா? இது என்ன வம்பு?

கொடிச்சி : ஓமப்பா.. வள்ளியை இங்கு காணவில்லை… ஐயையோ!!!

நம்பி : இது என்ன அநியாயம். என் செல்வம் வள்ளியம்மாவுக்கு ஏது நடந்தது? இனி நான் செய்வது என்னவோ?

வேடுவர்கள் கூடுகிறார்கள்

நம்பி மெய்நடுங்க கோபம் கொண்டு அழுது வெம்பி
தனது வேடுவர் கூட்டத்துடன் தேடுதல் மேற்கொண்டான்

போர் எழுச்சி

இலங்கிய வில்லிசை விளங்கிடவே
ஈட்டி வாள் பாலம் அம்பும் ஏனைய கருவிகளும் சேர ஒலி
எடுத்தனரே மிக விசையுடனே சென்றனர் வள்ளியைத்தேடி
வேட்டை நாய் வழி காட்ட சீர் மிகு திருப்பூங்கா ஒன்றில்
மாட்சிமை பொருந்திய வள்ளலுடன் இருப்ப வள்ளியைக் கண்டனரே

அவர்களைக் கண்ட வள்ளி முருகனுக்கு கூறுகிறாள்

வருகின்ற வேடுவர்கள் மிகக்கொடியவர்கள்
கொடூரம் மிகச்செய்வார்கள் என்கோவே
கருகின்றது என்நெஞ்சம் மிகவும் ஐயா
ஒருவாறு நாம் இவ்விடத்தை விட்டு அகலுவோமா?

முருகன் புன்னகையுடன் வள்ளிக்கு கூறுகிறார்

வேடுவர்கள் உன்னை இனித் தீண்ட மாட்டார்
அவர்கட்கு கேடு வருவதை முன் அறிய மாட்டார்
அவர்கள் பாடு நீ இப்போது நன்கறிவாய்

என்று கூறி கோடுயர் கோழிக் கொடி கொக்கரக்கோ என ஒலிக்க வைத்தார். அக்கணத்திலே அங்கு எதிர்த்து வந்த வேடுவர் கூட்டமெல்லாம் மடிந்தார்கள். தனது பெற்றார் சுற்றத்தார் எல்லோரும் இறந்த நேரத்தில் வள்ளி நாயகியை முருகன் சோதிக்க விரும்புகிறார் முருகவேள் பெருமான்.

நாம் இவ்விடத்தை விட்டு செல்வோம் எனக் கூறியதும், வள்ளி எவ்வித தயக்கமும் இன்றி கந்தனுடன் இணைந்து சென்றாள்.
- பதியோடு பாசம் சேர்ந்து விட்டது பசுவை நீக்கி விட்டு



நாரதர் வருகை

தந்தை தாய் தமர் அழிய இந்தத்
தையல் தனைக் கொண்டு செல்வது தகுமோ
எந்தையே அருள் புரிவீர்

எம்முருகன் சம்மதித்து புன்னகை செய்து
வள்ளியின் புகழை இந்த உலகம்
உணரும் தத்துவத்தைக் காட்ட நினைந்து

"வள்ளியே இவர்களை நீ உடனே உயிர் பெற வழங்குக வரம்" என இளங்குமரன் எடுத்துரைத்தார்.

வள்ளி, இறந்து கிடந்தவர்களை உயிர் பெறும்படி தன் மனதில் கூற யாவரும் உயிர் பெற்று எழுந்தார்கள்.

நம்பி முருகனை வணங்குதல்

நீல மயில் ஏறும் நிர்மல மூர்த்தியே
கோலக் குறத்தி தனை ஏற்கும் குணசீலா
மூல காரணத்தை அறியாது என் செய்த பிழையை
ஞாலத்தார் அறிய மன்னித்து அருளினையோ
செய்த பிழை பொறுத்தருளும் - தேவரீர்
சிற்றூர்க்கு வந்து மணம் செய்திடுவீர் - என்றும்
வேதம் புகழ் நாரதரும் வருவீராக…

பாகம் 09 முற்றிற்று...


0 வாசகர் கருத்துக்கள்:

கருத்துரையிடுக