2009-08-28

சிறீ வள்ளி திருமணம் - பாகம் 01

இசையும் கதையும்

இறைவணக்கம்
:

பாடல்
விக்ன விநாயகனே சரணம்..
எண்குணம் விளங்கும் பரமனே சரணம்..
இமயம் மேவிய இளவரசியே சரணம்..
நித்தம் அருள் செய்யும் நீலவண்ணனே சரணம்..
கருணை செய் சிவ கடம்பனே சரணம்..
தனம் தரும் செல்வியே சரணம்..
இயல் இசை நாடகம் இயல்பாகவே தரும் வாணியே சரணம்..


தேம்பாகு போன்றதோர் தெய்வீக மாக்கதையாம்..
சிறீ வள்ளி நாயகன் திருமணக் கதையாம்..
மேம்பாடுடைய மேன்மக்களே செந்தமிழ்ச்செல்வர்களே..
தாம் அருள்கொள் நோக்கினிற்கொண்டுவப்பீர்களே..

கதை:

வாசகப் பெருமக்கள் அனைவருக்கும் இதய பூர்வ வணக்கம்..
"சைவநெறி" பதிவு அரங்கத்தில் நிகழ்த்தப்போவது சிறீவள்ளி திருமணக்காவியம்..
இந்த அருங்கதையானது, உரையுடன் கூடிய இசைப் பாடல்களுடன் பதிவிடப்படுகிறது.

பாடல்
வள்ளிமலைச்சாரலிலே வனவேடர் வாழும் சிற்றூர்…
தெள்ளுபுகழ் யாவும் வழமுடனே உள்ள தொண்டை நாட்டின்…
உள்ளதோர் வள்ளிமலைப் பக்க ஊராம் மேற்பாடியேயாகும்…
கொள்ளும் வனவேடர்கட்கு வேந்தன் ஆவான் புகழ் நம்பிராசன்…

நலமுடனே வாழுகின்ற நம்பி மன்னனுக்கு பெண்மகவூப்பேறு…
இலததனால் அது வேண்டிப் பச்சை மயில் வாகனனைப்பாடி…
பலகாலம் திருவிழாப் பூசை கொண்டு தியானத்தவமிருந்தான்…
தமைவேண்டும் நம்பியின் வேண்டுதலை நம்பன் உணர்ந்து அருள்செய்தான்…

வள்ளி பிறப்பு:

பாடல்
அருந்தவத்தின் பெரும்பேறோ அறுமுகவன் திருவிளையாட்டோ…
விரும்பியதை நம்பிக்கு அளிப்பதற்கேற்ற காலமதோ…
திருமால் புதல்விகளுள் ஒருத்தி சுந்தரவல்லி என்பாள்…
மான்வயிற்றில் அவதரித்து பருவம் வந்தவேளையிலே…
ஈற்றுமான் வள்ளிக்கிடங்கில் குழந்தையை ஈன்று சென்றதுவே…

வள்ளிக்குழியினுள் வந்துதித்த ஞானக்குழந்தை தனைக்கண்டு..
கள்ளமிலாக் களிப்படைந்த நம்பி நாடி அவ்விடத்தே நயமாகச்சென்று…
அள்ளியெடுத்து அணைத்து முத்தமிட்டு ஆனந்த வசமாகி…
பிள்ளைப்பாசமுடைய தன் மனைவி கையில் கொடுத்தானே...

பாகம் 01 முற்றிற்று....

வெகு விரைவில் பாகம் 02 பதிவிடப்படும்..

0 வாசகர் கருத்துக்கள்:

கருத்துரையிடுக