2009-09-05
சிறீ வள்ளி திருமணம் - பாகம் 07
இசையும் கதையும்
முருகன் வள்ளிக்கு காட்சி கொடுக்கிறார்
ஓராறு வதனமும் ஈராறு கரமும்
ஓங்கார மயிலுடன் உற்றகழல் அடியும்
சீராய் விளங்கவே சிவகுமரன் நின்றான்
சீமாட்டி வள்ளியும் தெளிவாகக் கண்டாள்
முருகன் தோன்றியதும் வள்ளி பாடுகிறாள்
கைவேலின் அழகுடனே கைகுலிசமுதலாம் படைக்கலங்கள்
மை அணி கண்டன் தந்த கந்தன் பொருந்து கரங்கள் ஈராறும்
பொலிந்த முகங்கள் ஓராறும் இசைந்து தெரிந்த புரி நூலும்
மகிழ்ந்து சுரந்த இருதாளும் மகிழ்ந்து விளங்கு மயிலேறும்
திருந்தி அசைந்த கொடியாவும் சிறந்து விளங்கும் பெருமாளே
வேண்டுவார்க்கு வேண்டும் வரம் நல்கும் வள்ளலே வடிவேலா
மீண்டும் நான் பிறவிக் கடல் அழுந்தாமை புரிவாயே - என்னை
ஆண்டு கொள்ள வந்த அரசே அடியேன் அறியாமையால்
கொண்ட எனது பிழை பொறுத்தருள்வீர்...
முருகன்
பெண்ணே நீ என்னை அடைவதற்கு செய்த
கைவண்ணத்தாலே என்கருத்தில் உனைக்கொண்டேன்
சீவனைத் தேடிச் சிவம் வந்தணைக்கும் செய்கையீது
கன்னியே நீ சென்று தினைப்புலத்தைக் காவல் செய்வாயாக
மீண்டும் அங்கு நான் வருவேன்
வள்ளி தினைப்புலம் செல்ல முருகனும் அகன்றார்
எந்தை கந்தப்பன் எனை வந்து ஆட்கொள்வார்
அந்தோ இனி எனக்கு ஓர் குறையும் இல்லையென்று வள்ளி
புத்தி தடுமாறி விட்டேன் எனினும் இப்போ நான் அறிந்தேன்
தந்தி முகற்கிளையவர் தனது மெய்யுருவம் காண்பித்தார்
மிக ஆனந்தமாய் வள்ளி தினைப்புலத்தை அடைய அங்கு நின்ற தோழியாகிய இகுளை
பாங்கி
அம்மா நீ எங்குற்றாய்
ஆரணியம் தனில் நடந்து
எம்மாலே ஆனமட்டும்
எங்கணுமே தேடி வந்தேன்
(அம்மா)
பாய்புலிவாய்ப் பட்டனையோ
படு பேயைக் கிட்டினையோ
நோய் கொண்டு வழிமாறி
நொந்து மிக அலைந்தனையோ
(அம்மா)
வாய்கொண்டு பறவைகளைச்
சேர் என்று துரத்தாமல்
மாயமென மறைந்தாயே
மணமகள் போல நிற்கின்றாய்
(அம்மா)
கண்சிவந்து வாய் வெளுத்து
கனிவான வியர்வையுடன்
ஒண்ணகிலம் விம்மலுற
உடை நெகிழக் காரணம் சொல்
(அம்மா)
வள்ளி பதில்
பாங்கி நீ இவ்வாறு பதைபதைப்புக் கொள்ளாதே
ஓங்கும் மலைச்சாரலிலே சுனை ஒன்றில் நீராடி வந்தேன்
ஏங்கி நீ எரிச்சலுடன் ஏறுமாறாய் பேசாதே
தாங்கி எனைத் தேற்றும் தக்க பாங்கி நீ
இருவரும் இவ்வாறு நிற்க முருகன் வேடனாக வில்லுடன் வருகை
முருகன்
பெண்களே நான் எய்த அம்பு பட்டுக் காயமுடன் ஒரு பெண்யானை
திண்ணென ஓடி வந்து இப்புனத்தே வந்ததுவோ
ஒண்கண் மடவீர்காள் கூறுவீர்கள்
கண்கொண்டு வேடுவனார் கன்னியுடன் கலந்து கொண்டார்
பாங்கி (இகுளை உணர்ந்தாள்)
உங்கள் இருவீரதும் எண்ணக் கருத்தினை நான் உணர்ந்து கொண்டேன்
பாங்காக நீங்கள் பரிவாக பேசுங்கள் நான் அகலுகின்றேன்...
பாகம் 07 முற்றிற்று...
வெகுவிரைவில் பாகம் 08 பதிவிடப்படும்...
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 வாசகர் கருத்துக்கள்:
கருத்துரையிடுக