2009-09-06

சிறீ வள்ளி திருமணம் - பாகம் 08


இசையும் கதையும்


முருகன் வள்ளியைத் தன்னுடன் இணைத்து விடும்படி பாங்கியை வேண்டல்

மாதே கேள் நின் தலைவி வள்ளி எனும் பெண்ணரசை
நாரணனர் தந்த ஞானச் சிறுமிதன்னை
காரணமாகிக் காட்டிற் பிறந்தவளை
சீரான கற்புடைய கனியில் வடித்தெடுத்த
தேனான வள்ளியை நான் வதுவை செய்வதற்கு வழி செய்யாயோ…

பாங்கி மறுப்பு

கள்ளமில்லா வடிவேலனை பார்த்து பாங்கி கூறுதல்

ஐயரே பெரியவரே இந்த செய்தி தனை கேட்டு நீர்
உய்யும் வழி செய்தால் வேடுவரோ பொல்லாதவர் காணும்
உம்மையும் கொன்றிடுவார் என்னையும் துன்புறுத்துவார்
செய்யும் வகை அறியேன் ஓடி மறைந்து விடும்

முருகன் பதில்

வள்ளி தனை நான் மணக்க வழியில்லா விட்டாலோ
மடலேறு வேனென்று வடிவேலன் கட்டுரைத்தார்
(அவமானமாகிய எச்சரிக்கை முருகன் கூற)

பாங்கி

ஐயா கலங்காதீர் அறுக்க மடல் ஏறாதீர்
அம்மை தனை நான் கொணர்ந்து தருவேன் அம்மட்டும் நீர்
மையாகும் நன்னிழல் மாதவிப் பொதும் பரில்
மறைந்திருப்பீர் எம்பெருமானே! என அகன்றாள்

வள்ளியை முருகனிடம் ஒப்படைத்தல்

பாங்கி


வள்ளி நாயகியே நீ பதியை அடைவதற்கு பல்லாண்டு காத்திருந்தாய்
வள்ளல் நாயகன் பால் நான் ஒப்படைப்பேன்
கள்ளமில்லாக் கற்பரசே கவலையில்லாமல் என்னுடன் வா

என்று பாங்கி கூட்டி செல்ல

வள்ளி

என் அருமைத்தோழி நான் உன்னை மறவேன்
நீ என்னை அவருடன் சேரச் செய்த பணியை
(பாங்கி இருவரையம் விட்டு அகன்றாள்)

உரை

இருவரும் கலந்து இணையிலாத இன்ப நிலையை அடைந்தனர். பின்பு முருகன் வள்ளியை விடைபெற்று அகன்றார். புனத்தை அடைந்த வள்ளியை தினை அறுவடை காரணமாக வேடுவர் சேரிக்கு அழைத்து செல்கிறார்கள். சிற்றூர் அடைந்த வள்ளி தன்னுயிரை நாடி வந்த நாயகரை
என்றைக்கு காண்பேனோ என என்புருக கரைந்து கண்கள் கலங்கி புலம்பி சோர்ந்து வீழ்ந்தாள்...

நம்பி வருந்திப் பரிகாரம் செய்தல்

எனது மகள் வள்ளி நாயகியே உனது நிலை மாறவேண்டியதேன்?
உனக்கு நேர்ந்ததுவோ என்ன என்று வெறியாட்டச்சாமியை அழைத்து வந்து பரிகாரம் செய்வித்தான். தமது குலதெய்வமாகிய கந்தப்பெருமானுக்கு வேண்டிய விழா எடுத்தார்கள். வெறியாட்டக் கூத்தும் வேலனுக்கு விழா எடுத்தும் யாதும் பயன் இல்லை. கணமேனும் கண்ணுறுக்கம் கற்பரசி கொள்ளவில்லை. என் நாயகனைப் பிரிந்து நான் உறங்கேன் என வள்ளி விழித்திருக்கையில்...

முருகன் தினைப்புனத்துக்கு வருகை

அங்கே வள்ளியை காணாது மிககவும் சலிப்படைந்தார்

தினைப்புனத்தில் உள்ள பட்சிகாள் விலங்குகாள்
என்மனத்தை பறிகொடுத்த வள்ளி தனைக் கண்டீரோ
என்குறை தீர யார் தான் உதவுவீரோ

முருகன் வள்ளி இருக்கும் இடத்தை தேடி அறிந்து, குடிசைப்பக்கமாக வந்து சேர்ந்தார்.
தனக்கு இசைவான இகுளையாகிய பாங்கியிடம் தான் வந்ததை அறிவித்தார்.

பாங்கி வள்ளியிடம் செல்லுதல்

வள்ளியம்மா வள்ளியம்மா உன்னை அழைத்துச்செல்ல
வெள்ளிமலை நாதர் அருளியவர் உனைத்தேடி வந்துள்ளார்
நள்ளிருளில் இப்போ நான் உன்னை அவரிடம் ஒப்படைப்பேன்
எள்ளளவும் சுணங்காமல் என்னுடன் நீ
எடுத்த அடியோசை கேட்காமல் வந்து விடு

எல்லோரும் நித்திரையில் இருந்த நேரத்தில் தோழியுடன் வள்ளி செல்லுதல்

சாந்த நடை நடந்து தாய் தந்தை தமரயலார்
தழுவு நாய் கண்ணுறங்க தருணமதைப் பார்த்திருந்து
இருண்ட நடு நிசியில் மெதுவாக அடி எடுத்து
வாய்ந்த கதவு திறந்து வழி பார்த்து நின்ற வள்ளலிடம்
வள்ளியை ஒப்படைத்தாள்…

பாகம் 08 முற்றிற்று...


0 வாசகர் கருத்துக்கள்:

கருத்துரையிடுக