2009-08-27

விநாயகர் வணக்கம்


"திருவாக்கும் செய்கருமம் கைகூட்டுஞ் செஞ்சொற்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர்தம் - கை"


விநாயகன் என்பதன் பொருள் வி- மேலான, நாயகன் - தலைவன். அதாவது தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாத் தலைவன். இதனை விநாயக பஞ்சரத்தின சுலோகத்தில் "அநாய ஏக நாயகன்" எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நம்பினோர் கெடுவதில்லை. இது நான்கு மறைத்தீர்ப்பு. நம்பிக்கையுடன் தும்பிக்கையைப் பற்றுதல் வேண்டும். நாம் எந்த விடயத்தை ஆரம்பிக்க வேண்டினும் விநாயக வழிபாடு செய்யாது ஆரம்பிப்போமானால் அவ்விடயம் தடைப்படும். விநாயக வழிபாடு எமது சைவ மக்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல. பெளத்த மக்களில் பெரும்பாலானோர் விநாயக வழிபாடு செய்வதில் மிக ஈடுபாடு கொண்டுள்ளார்கள்.

விநாயக வழிபாட்டின் மேன்மையைக் கூறப் பல அம்சங்கள் உள. அவற்றில் தெய்வீகமான விடயம் ஒன்றுண்டு. அதுவே முருகப் பெருமான் வள்ளியம்மை திருமணக்காவியம். விநாயகப்பெருமானின் சகோதரன் முருகன், தினைப்புலத்தில் வைகும் குறவர் குலக் கொழுந்தாகிய சிறீ வள்ளி நாயகியாரைத் திருமணம் செய்து கொள்வதற்காய் வள்ளி மலைச்சாரலுக்கு சென்றார். அவ்வம்மையைத் தான் அடைவதற்காக பல வேறு உபாயங்களைச் செய்தும் அவை எதுவும் பலனளிக்காது விட்டது. அப்போது தான் முருகப்பெருமான் தான் அண்ணாவின் ஆலோசனை இல்லாது வந்து விட்டதை நினைக்கிறார். அந்நேரம் தம்பியார் தன் உதவியை வேண்டுகிறான் என்பதை உணர்ந்து உடனே எம்பிரான் விநாயகர், வள்ளிப்புனத்துக்கு புறப்பட்டு வந்து கந்தனின் விருப்பத்தை நிறைவு செய்கிறார்.
இதனை அருணகிரிநாத சுவாமிகள் மிகச்சிறப்பாகப் புனைந்து தந்துள்ளார். அந்த புனித திருப்புகழ் வரிகள் இவையே..
"அத்துயரது கொடு சுப்பிரமணிபடு அப்புனமதனிடை இபமாகி
அக்குற மகளுடன் அச்சிறு முருகனை அக்கணமணமருள் பெருமாளே"

இபம் - யானை

இக்கருத்தினை எமது உள்ளத்துள் இருத்தி விநாயகப்பெருமானின் திருவருளைப் பெறுவோமாக.

0 வாசகர் கருத்துக்கள்:

கருத்துரையிடுக