2009-10-04

ரத்மலானையில் மீள் எழுச்சி பெறும் திருநந்தீஸ்வரம்

இந்து மா சமுத்திரத்தின் நித்திலம் என வர்ணிக்கும் வகையில் அமைந்தது இலங்கைத் தீவாகும். இற்றைக்கு ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர் 1505ம் ஆண்டு போர்த்துக்கேயர்கள் இத்தீவின் தென் பகுதியில் காலித்துறைமுகத்தில் காலடிவைத்தனர். தமது சமயம் விழிப்படைவதற்கு வேண்டி, இந்நாட்டில் பூர்வீகமாக வழிபாட்டில் இருந்த இந்து ஆலயங்களை அழித்துவிடச் சற்றும் தயங்கவில்லை. வடக்கில் நகுலேஸ்வரம், தெற்கில் திருநந்தீஸ்வரம், கிழக்கில் திருக்கோணேஸ்வரம், மேற்கில் முனீஸ்வரம் ஆகிய தொன்மை வாய்ந்த கரையோரத்தில் அமைந்திருந்த புனித இந்து ஸ்தலங்கள் யாவும் சிதைத்தழிக்கப்பட்டது. இதற்கான சான்றுகள் புதைபொருள் ஆய்வுகளில் இருந்து நிரூபிக்கப்பட்டிருக்கின்றது.



இதேபோலவே, ரத்மலானையில் கோயில் கொண்டு எழுந்தருளியிருந்த திரு நந்தீஸ்வரர் ஆலயமும் போர்த்துக்கேயரின் பார்வையிலிருந்து தப்பவில்லை. 1518 இல் சிதைத்து அழிக்கப்பட்ட திருநந்தீஸ்வரத்தின் பழம் பெரும் சிவலிங்கத்தின் பகுதியான ஆவுடையாரும் உடைந்த நிலையில் உள்ள நந்தியும் சிவலிங்கத்தின் உடைந்த மேல் பகுதியும் மற்றும் பல கோயிற் படிமங்களும் 1984 ஆம் ஆண்டு நிலத்தை அகழ்ந்த போது கிடைக்கப்பெற்றது. அகழ்வின் போது கிடைக்கப்பட்ட அம்மன் சிலை ஒன்று தற்போது தொல்பொருள் காட்சியகத்தில் உள்ளது.



நந்தீஸ்வரர் கோயில் அமைந்துள்ள ஊரின் பெயர் கொனாகோயில் என சிங்களத்தில் வழங்கப்படுகிறது. அதாவது நந்தியூர் என்று தமிழில் கூறலாம். இன்று இக்கோயிலானது பெளத்த மதத்தவரான காமினி பெர்னாந்து என்பவரால் பரிபாலிக்கப்பட்டு வருகிறது. சைவ, பெளத்த இரு சார்பினரும் சென்று தமக்கே உரிய முறையில் வழிபாடுகளை செய்து வருகிறார்கள். மகாசிவராத்திரி, நவராத்திரி, நாயன்மார் குருபூஜைகள், திருமுறை முற்றோதல் உட்பட சகல இந்து சமய சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றுவருவதுடன் அவற்றில் இந்து தமிழர்களுடன் சிங்கள பெளத்தர்களும் பக்திசிரத்தையுடன் இணைந்து கொள்வது சிறப்புக்குரிய அம்சமாகும்.


ரத்மலானயில் பலநூறு ஆண்டுகள் மிகவும் சிறப்புடன் விளங்கிய இந்துக்களின் பழம் பெரும் திருத்தலமான திருநந்தீஸ்வரம் போர்த்துக்கேயரால் சிதைக்கப்பட்டு இப்போது மீண்டும் சிவலிங்கம், நந்தி, பலிபீடம் என்பன அமையப்பெற்றுப் பொலிவு பெறுகின்றது. இவ்வாலயத்தில் இப்போது பிரதிஷ்டான வேலைகள் நடைபெற்று வருகிறது. சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு பின் மீள எழுச்சி பெறும் திருநந்தீஸ்வரம் இலங்கை நாட்டின் இந்துக்களின் பழம் பெரும் வரலாற்றின் சின்னமாகவும், புனித தலமாகவும், பண்டைய இருப்பின் பிரதிபலிப்பாகவும் விளங்குகிறது. திருநந்தீஸ்வரத்தின் பிரதிஷ்டான பணியிலும் வளர்ச்சியிலும் பங்களிப்பு செய்யவேண்டியது இந்துக்களாகிய எமது கடமையாகும். எம்மால் இயன்ற காணிக்கையினைக் கோயில் திருப்பணிக்காக ஒதுக்குவோமாக.

வாழ்க சைவம் வளர்க்க சைவநீதி



7 வாசகர் கருத்துக்கள்:

பெயரில்லா சொன்னது…

சைவ மேம்பாட்டுக்காக நாம் எம்மால் இயன்ற தொண்டுகளை செய்யவேண்டும்... இது ஒவ்வெருவருக்கும் உரித்தான கடமை.

சைவப்பிரியர் சிவகுணம் சொன்னது…

உங்கள் சிந்தனைக்கு நன்றி.

சைவப்பிரியர் சிவகுணம் சொன்னது…

தமிழினி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

சிவத்தமிழோன் சொன்னது…

தங்கள் வலைப்பூ கண்டு ஆனந்தமுற்றேன். அருமையான வலைப்பூ. திருநந்தீஸ்வரம் பற்றிய தங்களின் பதிவுக்கு நன்றி. சிவப்பு பூக்களால் இராவணன் சிவபெருமானை பூசை செய்த புண்ணிய மண்ணே இரத்மலானை (இரத்மல்) ஆகும். இங்கு எழுந்தருளியுள்ள எம்பெருமான் திருநந்தீஸ்வரரின் திருவருள் மீண்டும் ஆலயத்தை கட்டியெழுப்ப உதவும் என்பது திண்ணம்.

தெற்கில் இருந்ததாக மகாவம்சம் கூறும் பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றாக தொண்டீசுவரத்தையே வரலாற்று ஆய்வாலளர்கள் சுட்டுகின்றனர். எனினும் பண்டைய காலந்தொட்டு திருநந்தீஸ்வரரின் திருவருள் இரத்மலானையை ஆட்சி செய்துள்ளதென்பது தமிழரின் இருப்பை இலங்கையில் உறுதி செய்யும் விசயம் தானே!!!!

தங்கள் பணி தொடர வாழ்த்துகிறேன்
நன்றி

www.bogy.in சொன்னது…

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

சைவப்பிரியர் சிவகுணம் சொன்னது…

சிவத்தமிழோன்:
உங்கள் அருமையான பின்னூட்டலுக்கு மிக்க நன்றி. உங்கள் இறைபணியும் இனிதே தொடர என் வாழ்த்துக்கள்...

சைவப்பிரியர் சிவகுணம் சொன்னது…

www.bogy.in:
உங்கள் தளத்திலும் இந்த வலைப்பூ பதிக்கப்பட்டாயிற்று... நன்றி.

கருத்துரையிடுக