2009-08-31

குரு பூசைத் தினங்கள்



சித்திரை மாதம்

1.திருநாவூக்கரசர் - சதயம்
2.இசைஞானியார்
3.சிறுத்தொண்டர் - பரணி
4.மங்கையற்கரசியார் - ரோகினி
5.விறன்மிண்டர் - திருவாதிரை
6.திருக்குறிப்புத்தொண்டர் - சுவாதி


வைகாசி மாதம்

7. திருஞானசம்பந்தர் - மூலம்
8. திருநீலநக்கர் - மூலம்
9. திருநீலகண்டயாழ்ப்பாணர் - மூலம்
10.முருகர் - மூலம்
11.சோமாசிமாறர் - ஆயிலியம்
12.நமிநந்தியடிகள் - பூசம்
13.கடற்சிங்கர் - பரணி


ஆனி மாதம்


14. அமர்நீதிநாயனார் - பூரம்
15. ஏயர்கோன்கலிக்காமர் - ரேவதி
மாணிக்கவாசகர் - மகம்


ஆடி மாதம்

16.சுந்தரமூர்த்திநாயனார் - சுவாதி
17.கழறிற்றறிவார் - சுவாதி
18.கலியர் - கேட்டை
19.கூற்றுவர் - திருவாதிரை
20.கோட்புலியார் - கேட்டை
21.புகழ்சோழர் - கார்த்திகை
22.பெருமிழலைக்குறும்பர் - சித்திரை
23.மூர்த்தியார் - கிருத்திகை


ஆவணி மாதம்


24.அதிபத்தர் - ஆயிலியம்
25.இழையான்குடிமாறர் - மகம்
26.குங்கிலியக்கலயர் - மூலம்
27.குலச்சிறையார் - அனுசம்
28.செருத்துணையார் - பூசம்
29.புகழ்துணையார் - ஆயிலியம்


புரட்டாதி மாதம்

30.உருத்திரபசுபதி - அச்சுவினி
31.ஏனாதிநாதர் - உத்தராடம்
32.திருநாளைப்போவார் - ரோகினி
33.நரசிங்கமுனையர் - சதயம்


ஐப்பசி மாதம்

34. இடங்கழியார் - கார்த்திகை
35. சத்தியார் - பூசம்
36. திருமூலர் - அச்சுவினி
37. நின்றசீர்நெடுமாறர் - பரணி
38. பூசலார் - அனுசம்
39. ஐயடிகள் - மூலம்


கார்த்திகை மாதம்

40. ஆனாயர் - அத்தம்
41. கணம்புல்லர் - கார்த்திகை
42. சிறப்புலிநாயனார் - பூராடம்
43. மூர்க்கர் - மூலம்
44. மெய்ப்பொருளார் - உத்திரம்


மார்கழி மாதம்

45. இயற்பகையார் - உத்திரம்
46. சடையனார் - திருவாதிரை
47. மாணக்கஞ்சாறர் - சுவாதி
48. வாயிலார் - ரேவதி
49. சாக்கியர் - பூராடம்


தை மாதம்

50. அப்பூதியடிகள் - சதயம்
51. அரிவாட்டநாயனார் - திருவாதிரை
52. கண்ணப்பநாயனார் - மிருகசீரிடம்
53. கலிக்கம்பர் - ரேவதி
54. சண்டேஸ்வரர் - உத்திரம்
55. திருநீலகண்டர் - விசாகம்


மாசி மாதம்

56. எறிபத்தர் - அத்தம்
57. காரியார் - பூராடம்
58. கோட்செங்கட்சோழர் - சதயம்


பங்குனி மாதம்

59.தண்டியடிகள் - சதயம்
60.நேசர் - ரோகினி
61.முனையடுவார் - பூசம்
62.கணநாதர் - திருவாதிரை
63.காரைக்காலம்மையார் - சுவாதி

சிறீ வள்ளி திருமணம் - பாகம் 03


இசையும் கதையும்

முருகன் திருத்தணிகைக்கு வருதல்


பாடல்:

வள்ளிக் கருள்புரிய வள்ளலெனும் வேலழகன்…
வாழ்கந்த மலையைவிட்டு மன்னும் திருத்தணிகைக்…
கொள்ளும் புகழ் மலையிற் கொலுவீற்றிருந்தானே…
குமரன் திருமுகப்பெருமான் இருந்தானே...

நாரதன் முருகனைப்பணிந்து ஆராதனை செய்கிறார் (முருகா சரணம்)

நினைத்த போதில் என்முன் வருவாய்…
நித்திய சாந்த நிலையைத் தருவாய்…
மனத்துயர் தீர்க்கும் மருந்தே வருவாய்…
மண்டலமெல்லாம் நிறைந்தாய் குருவாய்…

முருகன் நாரதரைப் பார்த்து

அருள் நிறைந்து வருகை தந்த அருமுனி தமைப்பார்த்து…
கருணை பொழிந்து வந்த காரணத்தை நயப்புடனே செவிமடுத்தார்!

நாரதர்:

பெருமறைகள் போற்றும் பெருமானே பூரணனே பூர்வா உனைப்…
போற்றிய சுந்தரவல்லி தாம்பெற்ற வரத்தின்படி நம்பிராசனுக்கு ஓர் மகளாகி… அழகுக்கிணையில்லா அழகியார் வள்ளி என நாமம் பெற்று வாழ்கின்றாள்…
குறவர் குலமுறையில் உயர் பரணில் ஆலோலம் ஓலமிட்டு வாடுகிறாள்…

கருணைக் கடலே கடுவினைகள் தீர்ப்பவனே கற்பகவல்லி…
தரு பாலகனே தணிகைமலை நாயகனே தந்திமுகற்கிளையவனே…
உரிமையுடன் நீ அங்கு சென்று அம்மணியாம் வள்ளி நாயகியை…
அரிய மணமியற்றி அடியேமைக் காத்திடுவீர் எம்வினை தீர்த்திடுவீர்…

முருகன் நாரதருக்கு

நன்று நன்று நாரதரே நமக்கும் நினைவதுவே…
என் கூற்று முறையாலே நான் ஆங்கு சென்று…
அன்னமென நீர் கூறும் அழகியாம் வள்ளிதனை…
மன்னும் மணம் செய்து காத்திடுவேன் செகமெல்லாம்…

(என்று கூறி முருகன் நாரதரை அனுப்பிவிட்டு, வேடனது வேடமாக வள்ளியிடம் செல்கின்றார்)

பாடல்

பல்லவி
சிலை வேடுவன் வந்தான் -அருட்
சிங்கார வேலன் வந்தான்…
(சிலை)

அனுபல்லவி
நிலை தாங்கிய தவம் பேணி…
நின்றிடும் வள்ளிமுன் சென்றிடும் சண்முக…
(சிலை)

சரணம்
மானைத் தேடு வானைப் போலே…
மதுவைத் தேடும் வானைப் போலே…
மோனம் நாடும் முதல்வன் போலே…
முன்னர் பழகிய நண்பனைப் போலே…
(சிலை)

2009-08-29

சிறீ வள்ளி திருமணம் - பாகம் 02

இசையும் கதையும்

குழந்தை வளர்ப்பு: (தாலாட்டு)

பாடல்:

ஆனந்தமாய்க் கொடிச்சி அன்பாக மார்போடு…
அணைத்திட்ட போதினிலே அருவிமுலை சுரக்க…
கானந்தனில் வள்ளிக் குழியின் கிடந்தனள்…
காரணமாம் பெயராக வள்ளி எனப்பெயரிட்டனர்…

குறவரின் மத்தியிலே கொஞ்சும் கிளி போலே…
குந்தித் தவழ்ந்து குதலை மொழி பேசி…
சிறுக நடைநடந்து சிற்றிடைச்சி வாழுகிறாள்…
தேவாதி தேவர் தொழுஞ் சீமாட்டி வாழுகிறாள்…

அந்த வனவேடர்க்கு அரிய ஒரு பெண்ணாகி…
அன்னை வள்ளி நாயகியார் அழகெறிக்க வாழுகிறாள்…
இந்த விதமாகி வளர்ந்திளமதிய மேனியளாய்…
ஈராறு வயதுடைய எழிற் கன்னியானாளே...

வள்ளி புனம் காத்தல்: (மலமாகிய பறவைகளை ஓடும்படி செய்தல்)

பாடல்:

கன்னி வள்ளி நாயகியை குலமுறை தவறாது…
மன்னு தினைப்புனத்திற் காவல் செயவைத்தார்கள்…
உன்னும் தவக் கொழுந்தாய் உத்தமியை வைத்தாரே…
உலகெல்லாம் நிற்பவனை உயர் பரணில் வைத்தாரே…

கூட்டிருளைப் போக்கக் குருவிவைத்த மாமணிபோல்…
குறவர் புனங் காக்கக் குமரியை வைத்தாரே…
தீட்டும் தவம் பேணும் ஜீவான்மா வாகியவள்…
சேருமலப் பறவைகளைச் சேராமல் ஓட்டுகிறாள்…

வள்ளி:

ஆலோலம் ஆலோலம் ஆலோலமே...
ஆலோலம் ஆலோலம் ஆலோலமே…
பறவைகள் புறவங்காள் ஆலோலமே...
பொலி தோகை மஞ்ஞைகாள் ஆலோலமே…
சேவல்காள் சொற்கிளிகாள் ஆலோலமே
சிட்டுகளே குயிலினமே ஆலோலமே…

கதை:

வள்ளி தினைப்புலத்தில் வந்த பறவைகளை வாரிக் கவண் வீசி வாதாடி ஓட்டுகிறாள்.
உள்ளங் கசிந்துருகி ஓம்முருகா என்று சொல்லி உத்தமியாள் தினைப்புலத்து மத்தியிலே வாழ்கையிலே…

நாரதர் தினைப்புலதிற்கு வருகை:

பாடல்:

திருத்தணிகை மாமலையில் சிவமுருகன் வீற்றிருக்க…
சிறீவள்ளி முந்தவத்தின் செய்த பயன் கூடியதால்…
பொருத்தமாய் நாரதரும் புனத்தினிலே வந்தடைந்தார்…

பொற்புயர்ந்து கற்புயர்ந்து புகழுயர்ந்து நின்றாளை…
கண்டு வணங்கிக் கருணையால் விடைபெற்றுக்…
கவினார் திருத்தணிகைக் கந்தனிடம் வந்தடைந்தார்…

தொண்டர்க்கரியவனே சுந்தரனே...
மெய்ஞ்ஞான பண்டிதனே…
என்று குகன் பாதம் பரவி நின்றார்...

பாகம் 02 முற்றிற்று...

வெகுவிரைவில் பாகம் 03 பதிவிடப்படும்...

2009-08-28

சிறீ வள்ளி திருமணம் - பாகம் 01

இசையும் கதையும்

இறைவணக்கம்
:

பாடல்
விக்ன விநாயகனே சரணம்..
எண்குணம் விளங்கும் பரமனே சரணம்..
இமயம் மேவிய இளவரசியே சரணம்..
நித்தம் அருள் செய்யும் நீலவண்ணனே சரணம்..
கருணை செய் சிவ கடம்பனே சரணம்..
தனம் தரும் செல்வியே சரணம்..
இயல் இசை நாடகம் இயல்பாகவே தரும் வாணியே சரணம்..


தேம்பாகு போன்றதோர் தெய்வீக மாக்கதையாம்..
சிறீ வள்ளி நாயகன் திருமணக் கதையாம்..
மேம்பாடுடைய மேன்மக்களே செந்தமிழ்ச்செல்வர்களே..
தாம் அருள்கொள் நோக்கினிற்கொண்டுவப்பீர்களே..

கதை:

வாசகப் பெருமக்கள் அனைவருக்கும் இதய பூர்வ வணக்கம்..
"சைவநெறி" பதிவு அரங்கத்தில் நிகழ்த்தப்போவது சிறீவள்ளி திருமணக்காவியம்..
இந்த அருங்கதையானது, உரையுடன் கூடிய இசைப் பாடல்களுடன் பதிவிடப்படுகிறது.

பாடல்
வள்ளிமலைச்சாரலிலே வனவேடர் வாழும் சிற்றூர்…
தெள்ளுபுகழ் யாவும் வழமுடனே உள்ள தொண்டை நாட்டின்…
உள்ளதோர் வள்ளிமலைப் பக்க ஊராம் மேற்பாடியேயாகும்…
கொள்ளும் வனவேடர்கட்கு வேந்தன் ஆவான் புகழ் நம்பிராசன்…

நலமுடனே வாழுகின்ற நம்பி மன்னனுக்கு பெண்மகவூப்பேறு…
இலததனால் அது வேண்டிப் பச்சை மயில் வாகனனைப்பாடி…
பலகாலம் திருவிழாப் பூசை கொண்டு தியானத்தவமிருந்தான்…
தமைவேண்டும் நம்பியின் வேண்டுதலை நம்பன் உணர்ந்து அருள்செய்தான்…

வள்ளி பிறப்பு:

பாடல்
அருந்தவத்தின் பெரும்பேறோ அறுமுகவன் திருவிளையாட்டோ…
விரும்பியதை நம்பிக்கு அளிப்பதற்கேற்ற காலமதோ…
திருமால் புதல்விகளுள் ஒருத்தி சுந்தரவல்லி என்பாள்…
மான்வயிற்றில் அவதரித்து பருவம் வந்தவேளையிலே…
ஈற்றுமான் வள்ளிக்கிடங்கில் குழந்தையை ஈன்று சென்றதுவே…

வள்ளிக்குழியினுள் வந்துதித்த ஞானக்குழந்தை தனைக்கண்டு..
கள்ளமிலாக் களிப்படைந்த நம்பி நாடி அவ்விடத்தே நயமாகச்சென்று…
அள்ளியெடுத்து அணைத்து முத்தமிட்டு ஆனந்த வசமாகி…
பிள்ளைப்பாசமுடைய தன் மனைவி கையில் கொடுத்தானே...

பாகம் 01 முற்றிற்று....

வெகு விரைவில் பாகம் 02 பதிவிடப்படும்..

திருமூல நாயனார்

"சிவ சிவ என்ன சிவ கதி தானே"

திருக்கைலாயத்தில சிவபெருமான் வீற்றிருக்கும் திருக்கோயிலுக்கு முதல் பெரும் காவலராக இருப்பவர் திருநந்தி தேவர்! அவர் இந்திரன் திருமால் பிரமன் ஆகியோருக்கு சிவநெறியினை அருளும் பணி செய்பவர். அகத்திய முனிவரிடம் நல் நட்புக் கொண்டவர். ஆகையால் அகத்தியரைக் காண்பதற்காக வட கைலையில் இருந்து புறப்பட்டு பொதிகை மலை பக்கமாக பயணத்தை மேற்கொண்டார். அவர் வரும் வழியில் திருக்கேதாரம் பசுபதி நேபாளம் மற்றும் அபிமுத்தம் (காசி) ஆகிய திருத்தலங்களை பணிந்து திருப்பருப்பதத்தை அடைந்தார். இறைவனது அருள் கூத்தின் பயனாக அங்கிருந்து காஞ்சி நகருக்குச் சென்று சில நாட்கள் தங்கியிருந்தார். அதன் பின்னர் திருவதிகைவீரட்டானம் பணிந்து மேலும் அருட்பெரும் கூத்தாடும் பொன்னம்பலனார் வீற்றிருக்கும் சிதம்பரத்தை சேர்ந்தார். அங்கு சில காலம் இருந்து காவிரியை அடைந்து அதன் தென்கரையில் ஏறினார்.

சிதம்பரம் ஆகிய தலங்களை விட்டுப்பிரிய முடியாத போதிலும் நண்பனைக்காணும் நோக்கமாக அத்தலத்தை விட்டுக்கிழம்பி சென்றுகொண்டிருக்கும் பாதையில் பசுக்கள் கூட்டமாக நின்று புலம்பும் குரல் கேட்டு அவ்விடத்தை அடைந்தார். அப்பசுக்களை மேய்க்கின்றவன் சாத்தனூரில் உள்ள இடையர்களின் குடியிலே பிறந்து தன் குலத்தொழிலைப் புரிபவன். பசுக்களை மேய்த்துவரும் மூலன் என்ற பெயருடையவன் ஆவான். அவ்வேளையில் அவனை ஒரு பாம்பு கடித்ததினால் இறந்து கிடப்பதைக்கண்டார். பசுக்கள் அவனைச்சுற்றி வளைந்து நின்று கதறுகின்றன என்பதை அறிந்து கொண்டார். அப்பசுக்கள் மீது கருணை கொண்டு அவற்றின் துயரத்தை தீர்ப்பதற்கு உறுதிகொண்டார். இறந்து கிடக்கும் மூலன் எழுந்தால் பசுக்களின் துயரம் தீரும் என்பதற்காக தனது உடலை ஒரு புறம்பாக மறைத்துவிட்டுத் தன் உயிரை இடையனின் உடலில் பாய்ச்சி பிராகாமியம் என்ற மந்திரத்தை உச்சாடனம் செய்து திருமூலராக எழுந்தார்.

தம்மைப்பாதுகாக்கும் எசமானாகிய மூலன் உயிர் பெற்று எழுந்ததைக்கண்டு பசுக்கள் எல்லாம் நாத்தழும்பேறத் திருமூலரை நக்கி மோந்து அவரைச்சுற்றி களிப்பினால் ஆரவாரம் செய்து மேய்ச்சல் பக்கங்களுக்குச் சென்றன. மாலை நேரம் வந்ததும் அப்பசுக்கள் எல்லாம் தமது கன்றுகளை நினைத்து சாத்தனூர் பக்கமாகத்திரும்பிச் சென்றன. சிவயோகியாரான திருமூலரும் இடையனின் உடம்பில் இருந்தபடியே பசுக்களின் பின்னே சென்று அவற்றின் தொழுவங்களைச் சேர்ந்தார்.

அவ்வேளையில் மூலனாகிய இடையனின் மனைவி தம் கணவர் உள்ளே வராது வெளியில் நிற்பதைக்கண்டு தனது கணவனை உள்ளே வரும்படி அழைத்தாள். ஆனாலும் அவர் உள்ளே செல்வதை மறுத்த போது அவள் அவரைத்தீண்டி வரும்படி வலியூறுத்த என்னைத்தீண்டாதே என்று உரத்துச்சொன்னார்.

தனக்கு யாரும் துணை இல்லாதவளாகிய மூலனின் மனைவி கவலையுடன் இருக்க யோகியார், புறம்பாகவே உள்ள ஒரு மடத்தில் போய் யோகத்தில் ஆழ்ந்தார். இரவானதும் மனம் மிகவும் வேதனையுடன் துயிலாமலே இருந்து மறுநாள் காலை விடிந்ததும் மூலனின் மனைவி அவ்வூரில் உள்ள பெரியார்களை அணுகி முறையிட்டாள். அவர்கள் திருமூலருடைய கோலத்தைப்பார்த்து இவர் உலக பற்றுகளை நீங்கியவர் என்பதை உணர்ந்தார்கள். ஆகையால் பெண்ணே! இனிமேல் இவர் உன்னோடு சேர்ந்து வாழ மாட்டார் என ஆறுதல் கூறி அவளை அவ்விடத்தை விட்டு அழைத்துச்சென்றார்கள்.


சாத்தனூர் பொதுமடத்தில் சிவயோகத்தில் அமர்ந்திருந்த திருமூலர் அந்நிலையில் இருந்து எழுந்து முன் தான் வந்த வழியே சென்று தனது உடல் இருக்கும் இடத்தை தேடிச்சென்றார். அவ்விடத்தில் சிவபெருமான் திருவருளின் நிமித்தம் உடல் மறைக்கப்பட்டு விட்டது. எனவே இவர் ஞான யோகத்தில் அமர்ந்து சிந்தித்தார். சிவாகமத்தின் உண்மைப்பொருளை தம் வாயிலாகத் தமிழில் வெளியிட வேண்டி தம்முடலை மறைத்தது இறைவன் திருவருள் என்பதை நன்கு உணர்ந்தார். மீண்டும் அவ்விடத்துக்கு இடையர்கள் வந்த போதும் தனக்கு நடந்த சம்பவங்களைக் கூறி அவர்களை அனுப்பி விட்டார். அவர்கள் போனபின் காமம், வெகுளி, மயக்கம் இவற்றைத் துறந்த திருமூலனார் திருவாவடுதுறை வந்தடைந்தார். அங்குள்ள திருக்கோயிலில் சிவனை வழிபட்ட பின் சுற்றுப்புறத்தில் உள்ள அரசமரத்தின் கீழே யோகாசனத்தில் அமர்ந்தார்.

சிவராஜ யோக நிஷ்டையில் இருந்து இதய கமலத்தில் எழுந்தருளிய இறைவருடன் இரண்டறக்கூடி ஒன்றித்துத் திகழ்ந்தார். உலகத்தார் பிறவித்துன்பம் என்னும் விஷத்தொடர்பில் இருந்து நீங்கி உய்யும் பொருட்டு சரியை, கிரியை, யோகம், ஞானம் முதலிய நான்கு நெறிகளையும் விரித்துக்காட்டும் "திருமந்திரம்" எனும் பாமாலையை ஆண்டுக்கு ஒரு திருமந்திரப்பாடலாக பாடத்தொடங்கினார். பரம்பொருளாகிய சிவபெருமானைப் போற்றி "ஒன்றவன் தானே" என்று தொடங்கி மூவாயிரம் ஆண்டுகள் சிவயோகத்தில் மகிழ்ச்சியுடன் ஆழ்ந்து மூவாயிரம் திருமந்திரப்பாடல்களைப் பாடி உலகுக்கு வழங்கியருளினார்.

அதன் பின்னர் சிவபெருமானது திருவருளினால் அவர் திருக்கயிலையை அடைந்து என்றும் பிரியாதபடி இறைவனது திருவடிநீழலில் சேர்ந்தார்.

2009-08-27

விநாயகர் வணக்கம்


"திருவாக்கும் செய்கருமம் கைகூட்டுஞ் செஞ்சொற்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர்தம் - கை"


விநாயகன் என்பதன் பொருள் வி- மேலான, நாயகன் - தலைவன். அதாவது தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாத் தலைவன். இதனை விநாயக பஞ்சரத்தின சுலோகத்தில் "அநாய ஏக நாயகன்" எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நம்பினோர் கெடுவதில்லை. இது நான்கு மறைத்தீர்ப்பு. நம்பிக்கையுடன் தும்பிக்கையைப் பற்றுதல் வேண்டும். நாம் எந்த விடயத்தை ஆரம்பிக்க வேண்டினும் விநாயக வழிபாடு செய்யாது ஆரம்பிப்போமானால் அவ்விடயம் தடைப்படும். விநாயக வழிபாடு எமது சைவ மக்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல. பெளத்த மக்களில் பெரும்பாலானோர் விநாயக வழிபாடு செய்வதில் மிக ஈடுபாடு கொண்டுள்ளார்கள்.

விநாயக வழிபாட்டின் மேன்மையைக் கூறப் பல அம்சங்கள் உள. அவற்றில் தெய்வீகமான விடயம் ஒன்றுண்டு. அதுவே முருகப் பெருமான் வள்ளியம்மை திருமணக்காவியம். விநாயகப்பெருமானின் சகோதரன் முருகன், தினைப்புலத்தில் வைகும் குறவர் குலக் கொழுந்தாகிய சிறீ வள்ளி நாயகியாரைத் திருமணம் செய்து கொள்வதற்காய் வள்ளி மலைச்சாரலுக்கு சென்றார். அவ்வம்மையைத் தான் அடைவதற்காக பல வேறு உபாயங்களைச் செய்தும் அவை எதுவும் பலனளிக்காது விட்டது. அப்போது தான் முருகப்பெருமான் தான் அண்ணாவின் ஆலோசனை இல்லாது வந்து விட்டதை நினைக்கிறார். அந்நேரம் தம்பியார் தன் உதவியை வேண்டுகிறான் என்பதை உணர்ந்து உடனே எம்பிரான் விநாயகர், வள்ளிப்புனத்துக்கு புறப்பட்டு வந்து கந்தனின் விருப்பத்தை நிறைவு செய்கிறார்.
இதனை அருணகிரிநாத சுவாமிகள் மிகச்சிறப்பாகப் புனைந்து தந்துள்ளார். அந்த புனித திருப்புகழ் வரிகள் இவையே..
"அத்துயரது கொடு சுப்பிரமணிபடு அப்புனமதனிடை இபமாகி
அக்குற மகளுடன் அச்சிறு முருகனை அக்கணமணமருள் பெருமாளே"

இபம் - யானை

இக்கருத்தினை எமது உள்ளத்துள் இருத்தி விநாயகப்பெருமானின் திருவருளைப் பெறுவோமாக.